மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். காமராஜர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது சம்பந்தமான வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரவீன் குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதற்காக அவரது படத்துடன் கூடிய பெரிய போஸ்டர்கள் மதுரையை சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்தது.

கல்லூரி வாசலிலும் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டு மாலை அணிவித்து அவரது நண்பர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். அச்சடித்து ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் தான் தற்போது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரவீன்குமாருக்காக ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் 'சிந்திய ரத்தம் வீண் போகாது', 'எதிரியை வீழ்த்துவது உறுதி', 'பகைக்கு வயது ஒன்று', 'ரத்தம் சரிந்த நாள்', 'பழிக்குப்பழி தொடரும்' போன்ற பயங்கரமான வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறது.

இது பிரவீன் குமாரை வெட்டிக்கொன்ற எதிர்த்தரப்பை எச்சரிக்கும் வகையில் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கும் கும்பல் யார் என காவல்துறை தற்போது விசாரணையை தொடங்கி இருக்கிறது. காதுகுத்து, கல்யாணம், பிறந்தநாள், சடங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் போஸ்டர் ஒட்டுவது மதுரை சுற்றுவட்டாரத்தில் வழக்கம். இறந்து போனவர்களின் நினைவு நாளிலும் போஸ்டர் ஒட்டுவார்கள். இந்த நிலையில் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது மதுரை மாநகர மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.