உடுப்பி பெண்கள் கழிவறை வீடியோ: சிஐடிக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவு!
உடுப்பி பெண்கள் கழிவறை வீடியோ தொடர்பான வழக்கை சிஐடிக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
கர்நாடக மாநிலம் உடுப்பி அம்பலபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 3 பேர், கழிவறையில் ரகசியமாக செல்போன் மூலம் சக மாணவிகளை ஆபசமாக வீடியோ எடுத்து தங்கள் ஆண் நண்பர்களுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த மாணவிகள் 3 பேர் சஸ்பெண்டு செய்து கல்லூரியில் நிர்வாகம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்காத நிலையில், இதுகுறித்து தாமாக முன் வந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உடுப்பி பெண்கள் கழிவறை வீடியோ தொடர்பான வழக்கை சிஐடிக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கழிவறைக்குள் சக மாணவியை படம்பிடித்த மூன்று சிறுமிகளின் வழக்கை கர்நாடக அரசு குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சிஐடி) ஒப்படைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
“உடுப்பியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் கழிவறையில் வீடியோ படம் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இது ஒரு முக்கியமான வழக்கு என்பதால், மேலதிக விசாரணைக்காக சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.” எனவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இரண்டு சமூகத்தை சேர்ந்த மாணவிகள் சம்பந்தப்பட்டுள்ள இந்த வீடியோ விவகாரத்துக்கு இந்து அமைப்புகள், பாஜக, சமூக ஆர்வலர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 19 ஆம் தேதி நடந்த அச்சம்பவத்தை கண்டித்தும், குற்றம் சாட்டப்பட்ட மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அம்மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது என் கையெழுத்து கிடையாது: அதிமுக எம்.பி தம்பிதுரை பரபரப்பு குற்றச்சாட்டு!
இந்த விவகாரம் தொடர்பாக உடுப்பி கல்லூரிக்கு நேரில் சென்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு விசாரணை மேற்கொண்டார். அதன்பின்னர், ‘கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதில் உண்மை இல்லை. காவல் துறையின் விசாரணையும் எங்கள் தரப்பில் இருந்து விசாரணையும் தொடரும், விரைவில் ஒரு முடிவுக்கு வருவோம்’ என அவர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மாணவிகளை கைது செய்து, வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தக் கோரி பாஜக மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்திய நிலையில், இந்த வழக்கானது சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டதை உடுப்பி காவல்துறை கண்காணிப்பாளர் ஹக்கே அக்ஷய் மச்சிந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த வழக்கை சிஐடியிடம் ஒப்படைப்பதற்கான காரணம் குறித்து விளக்க அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.