ஓசூரில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்.. 2 பேர் வெட்டி படுகொலை.. ஒருவரின் தலையை தெருவில் வீசி சென்ற கும்பல்!
காரை நிறுத்தி விட்டு பர்கத்தும் பொன்வண்ணனும் அந்த பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்றனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 15 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இருவரையும் சுற்றிவளைத்தது.
ஓசூரில் முன் விரோதம் காரணமாக 2 ரவுடிகள் 15 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஒருவரின் தலைமையை மட்டும் தெருவில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் பர்கத் (31). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஓசூர் நகர தலைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது நண்பர் ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியை சேர்ந்த பொன்வண்ணன் என்ற சிவா (27) மற்றும் ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த பக்கா என்கிற பிரகாஷ் (28). இவர்கள் 3 பேர் மீதும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பிரகாஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று விடுதலையானார்.
அவரை அவரது நண்பர்களான பர்க்கத்தும் சிவாவும் காரில் ஓசூருக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அதிகாலை சுமார் 4 மணியளவில் ஓசூர் பார்வதி நகரில் உள்ள பிரகாஷின் வீட்டில் இறக்கி விட்டனர். அங்கேயே காரை நிறுத்தி விட்டு பர்கத்தும் பொன்வண்ணனும் அந்த பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்றனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 15 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இருவரையும் சுற்றிவளைத்தது.
இதில், பொன்வண்ணன் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அவரது தலையை துண்டித்து தெருவில் வீசி சென்றது. பர்கத்தை கொலை செய்ய முயன்ற போது அவர்களிடம் தப்பித்து ஓட்டம் பிடித்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கா பிரகாஷ் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடினார். இதனிடையே அந்த கும்பலிடம் இருந்து தப்பிய பர்கத், பிரகாஷின் வீட்டிற்குள் நுழைந்து கதவை உள் பக்கமாக தாழிட்டார். ஜன்னல்களையும் பூட்டினார். ஆனால் அந்த கும்பல் வீட்டின் கதவு, ஜன்னல் மற்றும் மேற் கூரை ஆகியவற்றை உடைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தது அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. பின்னர் அந்த கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
அந்த கும்பலிடம் ஒரு வழியாக தப்பித்த பக்கா பிரகாஷ் ஓசூர் காவல் நிலையத்திற்கு சென்று தகவலை தெரிவித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த பொன்வண்ணன் மற்றும் வீட்டிற்குள் கிடந்த பர்கத் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. அதிகாலை நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.