விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த  லட்சும் என்ற  பெண் தனது கணவரை பிரிந்து,  9 மற்றும் 7 வயது மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். 

இதையடுத்து லட்சுமி தனது 2 மகள்களையும் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் தனது தாய் வீட்டில் கொண்டு போய் விட்டார். பின்னர் அந்த சிறுமிகளை புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்த்தார். ஒரு மகள் 4-ம் வகுப்பும், மற்றொரு மகள் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற 9 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தாள். அவரது தங்கையும் சோர்வுடன் காணப்பட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அந்த சிறுமிகள் இருவரையும் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு டாக்டர்கள் நடத்திய சோதனையில் சிறுமிகள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது  தெரியவந்தது. இது குறித்து விசாரித்த போது சிறுமிகள் இருவரும்  கதறி அழுதனர். 

சிறுமிகள் திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் இருந்த போது உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதனர். 

சம்பவம் நடைபெற்ற பகுதி விழுப்புரம் மாவட்டம் என்பதால் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய் பிரம்மதேசம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியின்  உறவினர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பாட்டி வீட்டில் 2 குழந்தைகளும் இருந்த போது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். 

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த அவர்களது உறவினர்கள் சிலர் முதலில் விளையாட்டு காட்டுவது போல் ஆபாசமான வார்த்தைகளை பேசி, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையறிந்த மற்றவர்களும் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் வேதனை தாங்காத அந்த சிறுமிகள் தங்களை விட்டுவிடுமாறு கதறி அழுதும் கேட்டுள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் 6 மாதங்களுக்கு மேலாக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து வந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமிகளின் சித்தப்பாக்கள் ரமேஷ்,  மகேஷ் உட்பட 8 பேரையும் கைது செய்தனர். 

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் சிறுமிகளின் தாத்தா துரை என்பரும் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் சிறுமிகள் 2 பேருக்கும் தொடர்ந்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயை பிரிந்து பாட்டி வீட்டில் இருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடுமையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.