மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது ஓணாம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது கவிதா. இந்த தம்பதியினருக்கு சந்தியா(16) என்கிற மகள் இருந்துள்ளார். இவர் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்திருக்கிறார். பால்பாண்டி குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஓணாம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பால்பாண்டி தனது மனைவி மற்றும் மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு திருவிழா முடிந்ததும் சந்தியா மட்டும் தனது பாட்டியுடன் தங்க, பால்பாண்டியும் அவரது மனைவியும் மதுரை திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் பாட்டி வீட்டில் இருந்து தோட்டத்திற்கு குளிக்க சென்ற சந்தியா ஒரு குன்று பகுதியில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இந்த சம்பவதில் காவல்துறையினர் ஓணாம்பட்டியைச் சேர்ந்த மாதவன் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் சந்தியாவை கல்லை போட்டு கொலை செய்ததாக மாதவன் தெரிவித்திருந்தார்.

ஆனால் காவலர்கள் அவர் பதிலில் சந்தேகம் அடைந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. திருவிழாவிற்கு பாட்டி வீட்டிற்கு வந்த சந்தியா, மாதவன் வீட்டிற்கு அடிக்கடி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சந்தியாவிடம் நைசாக பேசி, அவரை ஆள் இல்லாத தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார் மாதவன்.

அங்கு மாதவனின் சகோதரர் மது இருந்திருக்கிறார். மாதவனும் மதுவும் இரட்டை சகோதரர்கள் ஆவர். இருவரும் சேர்ந்து சந்தியாவை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதில் அலறிய சந்தியாவை அவர்கள் தாக்கியிருக்கிறார்கள். சந்தியாவை வெளியில் விட்டால் உண்மையை சொல்லிவிடுவார் என்று பயந்த சகோதரர்கள், அவரை கழுத்தை நெரித்துள்ளனர். பின்னர் அங்கிருந்த கல்லை சந்தியாவின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அதன்பிறகு சந்தியாவின் உடலை அங்கிருக்கும் ஒரு குன்று பகுதியில் வீசி தலைமறைவாகியுள்ளனர். இந்தநிலையில் தான் மாதவன் காவல்துறையில் சிக்கி இருக்கிறார். இதையடுத்து மதுவை தற்போது  தேடி வருகின்றனர். இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கும் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இரட்டை சகோதர்கள் சேர்ந்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.