திருச்சியில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி மாவட்டம் உறையூர் மின்னப்பன் கோவிலில் முதல் மரியாதை பெறுவது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஜிம் மணி தரப்பினருக்கும், புகழேந்தி தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஜிம் மணி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில், சிறையில் இருந்த புகழேந்தி கடந்த 13-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சின்ன செட்டி தெரு வழியாக புகழேந்தி சென்ற போது, 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஒட விரட்டி அவரை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த புகழேந்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் ஜிம் மணி கொலைக்கு பழி வாங்க புகழேந்தி வெட்டிக் கொலை செய்யபட்டிருக்கலாம் என்று போலீசில் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு 5 பேர் கும்பலை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.