ஊரடங்கு நேரத்தில் திருச்சி  ஸ்ரீரங்கத்தில் இன்று காலை பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை செய்து அவரது தலையை துண்டாக வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர்  தலைவெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன் (45). இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், சந்திரமோகன் இன்று காலை தனது  குழந்தையுடன்  இருசக்கர வாகனத்தில் தேவி தியேட்டர் பாலம் அருகே சென்றபோது, திடீரென காரில் அங்கு வந்த  3 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர், பயங்கர ஆயுதங்களுடன் தனது குழந்தையின் கண்முன்னே கொடூரமாக வெட்டி உள்ளனர். 

இதில், ரத்த வெள்ளத்தில்  சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத கும்பல்  சந்துருவின் தலையை தனியாக எடுத்து சென்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து, சந்துரு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், சந்திரமோகன் கொலை செய்து தலையை எடுத்து சென்ற சுரேஷ், சரவணன், செல்வகுமார் ஆகிய மூன்று பேரிடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அதில், கடந்த ஆண்டு தன் தந்தையைக் கொன்றதற்கு பழி வாங்கும் வகையில் நண்பர்களுடன் சேர்ந்து கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சந்துரு  நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் உள்ளார். ஊரடங்கு நேரத்தில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.