திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்தவர்  தமிழழகன் . அஜித் ரசிகரான  இவர் கடந்த 7-ந் தேதி தனது நண்பர்களுடன் நேர்கொண்ட பார்வை சினிமா பார்க்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன்பின் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் பெற்றோர் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. அவர் பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள கார்த்திக் என்கிற காக்கா கார்த்திக் என்பவருடன் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தமிழழகன் மாயமானதாக கண்டோன்மெண்ட் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மாயமான தமிழழகனை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தமிழழகனின் நண்பரான கார்த்திக் மற்றும் 2 பேரும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து கார்த்திக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவத்தன்று தமிழழகன், கார்த்திக்குடன் சினிமா பார்க்க செல்வதாக கூறி வீட்டில் ரூ.1,000 பெற்றுள்ளார். அந்த பணத்துடன் அவர் நேராக பொன்மலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்தபோது அங்கு கார்த்திக்கிற்கும், பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன்விரோதத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் தமிழழகன் சமாதானப்படுத்தி உள்ளார்.

அப்போது பிரபாகரன், தமிழழகனை கெட்டவார்த்தையில் திட்டி தாக்கி உள்ளார். இதனால் தமிழழகன் ஆத்திரமடைந்தார். அங்கிருந்து சென்றபின் 2 பேரும் சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பிரபாகரனை தாக்கி உள்ளனர்.

அதனைதொடர்ந்து நவல்பட்டில் உள்ள அவர்களது நண்பரான ஆட்டோ டிரைவரை சந்திக்க சென்றனர். அங்கு மது குடித்தபோது தமிழழகனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தமிழழகனை கார்த்திக் மற்றும் நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அவரது உடலை பொன்மலை கணேசபுரத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து வந்து எரித்துள்ளனர். கொலையான தமிழழகன் கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார். கார்த்திக் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். தற்போது கார்த்திக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.