சென்னையை அடுத்த மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருநங்கைகள் அதிக அளவில் தங்கி இருந்தனர். கடந்த வாரம் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றபோது திருநங்கையான ரவி என்ற சவுமியா கல்குவாரியில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் 2 நாட்கள் தேடி சவுமியா உடலை அழுகிய நிலையில் மீட்டனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே காஞ்சீபுரம் அருகே குருவிமலை, திருநங்கைகள் நகரில் கடந்த 19-ந்தேதி இரவு புகுந்த சிலர் அங்கிருந்த திருநங்கைகளை கடத்தி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட திருநங்கைகளான சுதா . வசந்தி . ரெஜினா, வினோதினி , ஆர்த்தி ஆகியோரை சிக்கராயபுரத்தில் மீட்டனர். 

கடத்தலில் ஈடுபட்ட சென்னை குன்றத்தூர் கெளுத்திபேட்டையை சேர்ந்த திருநங்கைகள் மகா என்கிற மகாலட்சுமி , வடிவேலு என்கிற வடிவு , சுக்கிரியா என்ற சூரியா , லத்திகா என்ற ராமு .அருணி மற்றும் கார் டிரைவர்கள் ரமேஷ்  உள்ளிட்ட 9 பேரை  போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் திருநங்கைகள் ஒரு வீட்டில் தங்கி கடை, கடையாக சென்று பணம் வசூல் செய்வது மற்றும் கைத்தொழில் உள்ளிட்டவைகளை செய்து வந்தனர். இவர்களுக்கு தலைவியாக மகா செயல்பட்டு வந்தார். திருநங்கைகள் வசூல் செய்யும் பணத்தில் ஒரு தொகையை மகாவிடம் கொடுக்க வேண்டும். இந்த குழுவில் இருந்த சவுமியா, மகாவிற்கு எதிராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மகா, சவுமியா இப்படி செய்கிறாளே, நீங்கள் கேட்க மாட்டீர்களா? என்று சக திருநங்கைகளிடம் கூறி உள்ளார்.

இந்தநிலையில் சிக்கராயபுரம் கல்குவாரியில் திருநங்கைகள் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் இடையே நடந்த மோதலில் சவுமியா தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து உடலை கல்குவாரியில் வீசி விட்டு அவர் குளிக்கும்போது தவறி விழுந்து இறந்து விட்டதாக சக திருநங்கைகள் நாடகமாடி உள்ளனர். இதையடுத்து மகா உள்ளிட்ட8 திருநங்கைகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.