நெல்லையில் திருநங்கை ஒருவர் தன்னை விட வயது குறைவானரை திருமணம் செய்தக்கொண்டதை அடுத்து ஆணின் உறவினர்கள் திருநங்கையை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
நெல்லையில் திருநங்கை ஒருவர் தன்னை விட வயது குறைவானரை திருமணம் செய்தக்கொண்டதை அடுத்து ஆணின் உறவினர்கள் திருநங்கையை கொடூரமாக தாக்கியுள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள சாத்தான்குளத்தை சேர்ந்த திருநங்கையான உதயா, தற்போது பழவூரில் வசித்து வருகிறார். அவருக்கும் கூடன்குளம் அருகே உள்ள ஸ்ரீரங்கநாராயணபுரத்தை சேர்ந்த பால ஆனந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்பு பழக்கம் படிப்படியாக காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி பாலஆனந்த் உதயாவை தேடி பழவூர் வந்துள்ளார். இதனையறிந்த பால ஆனந்தின் அப்பா பாலமுருகன், தம்பி சுபாஷ் மற்றும் உறவினர்கள் மணிகண்டன், சக்திவேல் மற்றும் சிலர் காரில் பழவூருக்கு வந்து அங்கு இருந்த பாலஆனந்த் மற்றும் திருநங்கை உதயா ஆகிய இருவரையும் காரில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

பின்பு திருநங்கை உதயாவை கூடன்குளம் பகுதியில் விட்டுவிட்டு மகன் பாலஆனந்தை அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருநங்கை உதயாவை, பால ஆனந்த் உறவினர்கள் மீண்டும் வந்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் திருநங்கைக்கு பலத்த காயம் முகம் மற்றும் உடலில் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து தன்னை அடித்ததாக கூடன்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக திருநங்கை சென்ற நிலையில் அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காயம் அதிகமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக நாகர்கோயில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உதயாவிற்கு இடதுகண் கீழே வீக்க காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருநங்கை உதயா பழவூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் தன் மீதான தாக்குதலுக்கு காதல் கணவரும் காரணம் என்ற அவரது புகாரின் அடிப்படையில் பால ஆனந்த், பாலமுருகன், லெட்சுமி, சக்திவேல், மணிகண்டன், ஆகியோர்கள் மீது திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ன் கீழ் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் இந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
