கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் மகன் செந்தில்/. தொழிலாளி. இவர் நேற்று தனது தாயார் அய்யம்மாளுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் காரனூர் வழியாக கள்ளக்குறிச்சிக்கு  சென்றார். 

கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்த செந்திலை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். 

ஆனால் செந்தில் வண்டியை நிறுத்தாமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ஓடிச் சென்று அவரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் பதற்றத்தில்  மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த அய்யம்மாள் தவறி கீழே விழுந்தார். 

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அய்யம்மாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுபற்றி செந்தில் தனது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் உலகங்காத்தான் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். 

இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டித்து  திடீரென மருத்துவமனை முன்பு கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.