தென்காசி அருகே நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முனியப்பன் என்ற முனீஸ்வரன் (27). இவர் ஜே.சி.பி. ஓட்டுநராக இருந்து வருகிறார். இவருக்கும் விருதுநகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களுக்கு நாளை திருமணம் நடக்க இருந்தது. வீட்டிற்கு அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்ததால் வீடே விழாக்கோலமாக காணப்பட்டது. நேற்றிரவு புதுமாப்பிள்ளை முனீஸ்வரன் ஒரு அறையிலும் அவரது தாயார் பரஞ்சோதி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினார்கள்.

இதனையடுத்து, இன்று அதிகாலை பரஞ்சோதி எழுந்து மகன் அறைக்கு சென்று பார்த்த போது முனீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதபடி அலறினார். உடனடியாக அவரது உறவினர்கள் விரைந்து வந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

புதுப்பாப்பிள்ளை கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தங்கை கணவர் வேல்முருகன் முனீஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்;- தங்கை கணவரான என்னை நிச்சயதார்த்த விழாவுக்கு அழைக்கவில்லை. மதிப்பதுமில்லை. இதனால் அவரது தங்கை கணவர் வீரசங்கிலி முருகன் முனீஸ்வரன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். நேற்று திருமண வீட்டிற்கு வந்த அவர் நன்றாக மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். 

இதனால், போகமடைந்த புதுப்பாப்பிள்ளை முனீஸ்வரன் பலரது முன்னிலையில் தங்கை கணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், முனீஸ்வரன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார். இதனையடுத்து, அனைவரும் தூங்கிய நேரத்தில் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து புதுமாப்பிள்ளையின் வாயை பொத்தி கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர், முனீஸ்வரனின் உடலை அங்கேயே போட்டு விட்டு ஒருவருக்கும் சந்தேகம் வராதபடி நைசாக தன் வீட்டிற்கு வந்து படுத்துக்கொண்டுள்ளார். 

இதனையடுத்து, வீரசங்கிலி முருகன் வீட்டு சுவரில் ரத்தக்கறை படிந்திருந்ததை கண்டு பிடித்தனர். இதனால் போலீசார் சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் தங்கை கணவரால் புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.