திருவள்ளூரில் நண்பன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் அதே தேதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் நண்பன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் அதே தேதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மில்டன் என்கிற அப்பு. இவர் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் தான் உதயகுமாரும் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வந்துள்ளார். இருவரும் ஒரே கல்லூரியைத் தேர்ந்தெடுத்து ஒன்றாகவே படித்து வந்திருக்கிறார்கள்.இந்த நிலையில் தன்னுடன் 11-ஆம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அரக்கோணம் அருகே புளியமங்கலம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி இறந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் 3 மணியளவில் மில்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து மில்டனின் சடலத்தை மீட்ட காவல் துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மில்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணயில், நண்பன் இறந்தது முதல் மில்டன் வருத்தத்தில் இருந்து வந்ததாகவும், நண்பனின் இறப்பை ஏற்றுகொள்ள முடியாமல் சில தினங்களுக்கு முன்பு மில்டன் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் மில்டன் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நண்பன் உதயகுமார் இறந்துபோன 5-ம் தேதியே தானும் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த மாதம் தூக்க மாத்திரைகளை வாங்கிவைத்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். இதனை பார்த்த அவரது பெற்றோர்கள் மாணவன் மில்டனை மீட்டுள்ளனர். மேலும் அவரைக் கண்டித்து இனியும் இதுபோல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.பழகிய நண்பனின் இழப்பை தாங்க முடியாமல் நண்பனுக்காக தானும் அதே தேதியில் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் மில்டன் ஜனவரி 5ம் தேதியான இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
