திருப்பூர் அருகே டிக் டாக் மூலம் அறிமுகமான வாலிபரை காதலித்து வந்த பள்ளி மாணவி கர்ப்பம் அடைந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அறிமுகம் இல்லாத நபர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கையை பயணிப்பதில் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை அடுத்து டிக் டாக் தற்போது உருவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் டிக் டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு அதிக நேரம் செலவிட்டுள்ளார். இவரது வீடியோக்களை பார்த்த பல்லடத்தை சேர்ந்த வேல்முருகன் என்னும் வாலிபர், சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, வீட்டுக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்கும் போது திருமண ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.  

இதனால் சிறுமி கர்ப்பம் அடைய, மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். பெற்றோர்களின் விசாரணையால் மனவேதனை அடைந்த மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு  மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதுகுறித்து காங்கயம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடைய டிக் டாக் காதல் குறித்து சிறுமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து வேல்முருகனை போச்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே சிகிச்சை பலனின்றி பள்ளி மாணவி கடந்த 27-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து டிக் டாக்கை தடை செய்ய வேண்டும். வேல்முருகன் ஜாமீனில் வெளிவந்தால் எங்களுக்கு ஆபத்து. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர்.