ஆட்டோ டிரைவரை பள்ளி மாணவர்கள் வெறித்தனமாக அடித்தே கொன்ற பயங்கர சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு, அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் திலீப் குமார், ஷேர் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி சவாரியை முடித்துக் கொண்டு அதே பகுதி பாரதியார் தெருவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, ஒரே மோட்டார் சைக்கிளில் பள்ளி சீருடை அணிந்த மூன்று மாணவர்கள் பயங்கர ஸ்பீடாக ஒட்டி வந்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென முன்னால் சென்ற திலீப்குமாரின் ஆட்டோவில் வேகமாக மோதியது.

இதனை பார்த்த  திலீப்குமார் கண்டித்தார். தாறுமாறாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மாணவர்களுடன் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் 3 பேரும் சேர்ந்து திலீப்குமாரை சரமாரியாக தாக்கினர், வலி தாங்க முடியாமல் நிலை குலைந்த திலீப்குமார் கீழே விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திலீப்குமாரையும், மாணவர்களையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். உடலில் பலத்த காயம் அடைந்த திலீப்குமார் சோர்வாக காணப்பட்டார். நெஞ்சுவலியும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு திலீப்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ஆட்டோ டிரைவரை அடித்து கொன்றது செங்கல்பட்டு டவுனில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் என்பது தெரிந்தது.

பள்ளி முடிந்ததும் மாணவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் பைக்கில் ஜாலியாக சுற்றி வந்துள்ளனர். அப்போது திலீப்குமாரின் ஆட்டோவில் மோட்டார் பைக் மோதியதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்து உள்ளது. இதனையடுத்து மாணவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் அவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொலையான ஆட்டோ டிரைவர் திலீப்குமாருக்கும் பிரியா என்ற மனைவியும், பத்மேஷ் என்ற மகனும், பத்மஜா என்ற மகளும் உள்ளனர். ஆட்டோ டிரைவரை பள்ளி மாணவர்கள் சேர்ந்து கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.