தூத்துக்குடியில் பிரபல ரவுடி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி என்.ஜி.ஓ. காலனி கணேஷ் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கதிரேசன் (31). பெயிண்டரான இவர் கூலித்தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார். கதிரேசன் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம், திசையன்விளை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலையில் தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் கதிரேசன் அரிவாளால் சரமாரியாக வெட்டிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் கதிரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை செய்யப்பட்ட இடத்தில் காலி மதுபாட்டில்களும், கதிரேசனின் செல்போனும் கிடந்தன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.