குருப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களை சிபிசிஐடி கையிலெடுத்து செய்கூலி சேதாரத்தோடு விசாரணை நடத்தியதில் அவர்கள் நாங்கள் எப்படி இந்த முறைகேட்டை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். 

 அந்த வாக்குமூலத்தின்படி, ‘’சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இடைத்தரகராக பணியாற்றி வரும் பழனி என்பவர் மூலமாக சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் எனக்கு அறிமுகமானார். 2018ம் ஆண்டில் இருந்து நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். 2019ம் ஆண்டு குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியான சமயத்தில், இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் தங்களுக்கு வேண்டியவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஜெயக்குமார் என்னிடம் கேட்டார் நானும் அதற்கு சம்மதித்தேன்.

இதற்காக 15 லட்சம் ரூபாய் பேரம் பேசினோம். விடைத்தாள்களை வேனில் எடுத்து வரும் போது எங்களுக்கான தேர்வர்கள் எழுதிய கோடிங் சீட் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே ஜெயக்குமார் ராமேஸ்வரம் சென்றுவிட்டார். எங்களுக்கு பணம் கொடுத்தவர்கள் கையில் மேஜிக் பேனாவை கொடுத்துவிட்டோம். அதன்படி அனைத்து வேலைகளும் நன்றாகவே முடிந்தது.

தேர்வு முடிந்ததும் அதன் விடைத்தாள்களை எடுத்துவரும் பொறுப்பு டிஎன்பிஎஸ்சியில் வேலை செய்யும் தட்டச்சர் மாணிக்கவேலிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவருக்கு உதவி செய்வதற்காக என்னை நியமித்து இந்தது டிஎன்பிஎஸ்சி.  இராமநாதபுரம் மாவட்டம் கருவூலத்தில் இருந்து தேர்வு தாள்கள்  இரவு ஏபிடி பார்சல் சர்வீல் வேனில் ஏற்றப்பட்டது. அந்த அறைக்கான சாவியை நான் வைத்துக்கொண்டேன். வேன் சென்னை நோக்கி புறப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், கருவூலத்தில் இருந்த தேர்வுதாள்களையும் ஏற்றிக்கொண்டு போகும் வழியில் ஒரு இடத்தில்  சாப்பிட சென்றோம். அப்போது எங்களுடன் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாரும் உடன் இருந்தார். என்னை பின்தொடர்ந்து வந்த ஜெயக்குமாரிடமும் தேர்வு தாள்கள்கள இருக்கும் அறைக்கான சாவியை ஒப்படைத்தேன். அவரும் தேவையானவர்களின் தேர்வு விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு என்னிடம் தெரியாமல் சாவியை ஒப்படைத்துவிட்டார். 

பிறகு நாங்கள் சென்னை செல்வதற்கு முன்பு இன்னொரு இடத்தில் டீ குடிக்கச்சென்றபோது திருத்தம் செய்யப்பட்ட தேர்வுதாள்களை ஒப்படைத்தார் ஜெயக்குமார். நானும் அந்த வேனில் யாருக்கும் சந்தேகம் வராதபடி வைத்துவிட்டேன். இப்படி நான் மாட்டிக்கொள்வேன் என்று எனக்கு தெரியாது. பணத்திற்கு ஆசைப்பட்டு என் வாழ்க்கை பறிபோய் விட்டது. சிவகங்கை மாணவன் தமிழக அளவில் அதிகமான மதிப்பெண் பெற்றார்.

 

திருடத் தெரியாதவன் தலையாரி வீட்டில் திருடிய கதையாக ஜெயக்குமார் அந்த மாணவன் கோடிங் சீட்டை நிரப்பியது தான் இந்த முறைகேடு வெளியில் தெரிந்திருக்கிறது என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார். இச்சம்பவம் மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறது. டிஎன்பிஎஸ்சியில் முறைகேடு என்பது தொடர்கதையாகவே நடந்திருக்கிறது. இன்னும் நடந்து முடிந்த தேர்வுகளை கூட ஆய்வு செய்தால் நிறைய அதிகாரிகளும், புரோக்கர்களும் மாட்டிக்கொள்ளுவார்கள் என்கிறார்கள் அதன் விபரம் தெரிந்த அதிகாரிகள்.

-த.பாலமுருகன்