Asianet News TamilAsianet News Tamil

கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி... திருவள்ளூரில் பரபரப்பு..!

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து இருவரும் கலெக்டர் அலுவலகத்தில் தங்களின் உயிரை விட முடிவு செய்தனர். 

thiruverkadu Couple suicide attempt at thiruvallur collector office as son takes house
Author
India, First Published Apr 5, 2022, 1:03 PM IST

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களின் மகன் அவர்கள் வாங்கி பயன்படுத்தி வந்த வீட்டை ஏமாற்றி பதிவு செய்து கொண்டு தங்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டதாக முதிய தம்பதி தெரிவித்தனர். மேலும் காவல் துறை மற்றும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தங்களின் குற்றச்சாட்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

திருவேற்காடு கஸ்தூரி பாய் அவென்யூ பகுதியில் குமார் (60) மற்றும் அவரின் மனைவி அமுலு (55) வசித்து வருகின்றனர். இருவரும் அமுலுவின் தாயார் பாரிஜாதம் (80) வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள், கோபி என்ற பெயரில் மகன் உள்ளனர். 

மகன் கொடூரம்:

ஐந்து ஆண்டுகளுக்கு முன் கோபி தனது பெற்றோரை ஏமாற்றி அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்களின் வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதி பதிவு செய்து கொண்டு இருக்கிறார். பின் இதுபற்றி அறிந்து கொண்ட குமார் மற்றும் அமுலு மகனிடம் விசாரித்துள்ளனர். மகன் ஏமாற்றியது பற்றி கேட்டதற்கு, ஆத்திரமடைந்த கோபி தனது பெற்றோர் இருவரையும் சரசமாரியாக திட்டி, வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறார். 

இதை அடுத்தே குமார் மற்றும் அமுலு பாரிஜாதம் வீட்டில் வசிக்க துவங்கினர். மகன் ஏமாற்றிய விவகாரம் பற்றி அமுலு திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். எனினும், காவல் துறை அதிகாரிகள் அமுலு புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி இருந்துள்ளனர். காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாததை அடுதக்து இவர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சுமார் எட்டு முறை புகார் மனு அளித்து இருக்கிறார். எனினும், இவரது மனுவிற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. 

தொடர்ந்து புகார் அளித்தும் காவல் துறை மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து தம்பதி மனமுடைந்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து இருவரும் கலெக்டர் அலுவலகத்தில் தங்களின் உயிரை விட முடிவு செய்தனர். அதன்படி இருவரும் சம்பவத்தன்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சென்றனர். அப்போது பை ஒன்றில் மண்ணெண்ணெய்யை மறைத்து எடுத்து சென்றனர். 

தீக்குளிப்பு:

பின் திடீரென பையில் மறைத்து வைத்து இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடல் முழுக்க ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் இதை பார்த்ததும், உடனடியாக இருவரையும் காப்பாற்றினர். 

நடவடிக்கை:

"நாங்கள் கடின உழைப்பு மற்றும் சிறுக சிறுக சேமித்து வாங்கிய சொத்து அது. எங்களது மகன் எங்களை ஏமாற்றி அதனை பறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விட்டான்," என அமுலு தெரிவித்தார். கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து கலெக்டர் ஆல்பி ஜான், இந்த குற்றச்சாட்டின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios