திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், இவர் முத்துப்பேட்டை அதிமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ராஜேஷ் நேற்று காலை ஆலங்காடு பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார், டூவீலரில் வந்த கும்பல் ராஜேஷை வழிமறித்து வெட்ட முயற்சித்துள்ளனர்.

அதனை சுதாரித்துக் கொண்ட ராஜேஷ் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தப்ப முயற்சித்துள்ளார். அப்போது காரை அவர் மீது மோதி நிலைநடுமாறி கீழே விழுந்த ராஜேஷை, அந்த மர்ம கும்பல் சுற்றி நின்று சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். கொலை செய்ததோடு மட்டுமல்லாது ராஜேஷின் தலையை தனியாக வெட்டி எடுத்த கும்பலில் இருந்த ஒருவர் லுங்கியில் அதைப் போட, அது தவறி கீழே சாலையில் உருண்டோடியது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெவ்வேறு இடங்களில் இருந்த ராஜேஷின் உடல், தலையை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவாரூரையே உலுக்கிய சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.