சென்னை எம்.ஜி.ஆர். நகர் சிறுவன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). பெரிய நிறுவனங்களுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (36) மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் ரித்தேஷ் சாய் (10).அதே பகுதி  தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்தான். 

அதேபகுதியில் பெற்றோருடன் வசித்துவந்தவர் நாகராஜ் (28). இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை. இவரும் ரித்தேசும் அன்பாக பழகிவந்தனர். ரித்தேஷ் சாய் தினமும் பள்ளி முடிந்து இந்தி டியூ‌ஷனுக்கு நகராஜ் தான் அழைத்துச்செல்வார்.

இவர்களது பழக்கம் மூலம் நாகராஜுக்கும் ரித்தேசின் தாய் மஞ்சுளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கார்த்திகேயன் வீட்டில் இல்லாத நேரத்தில் நாகராஜ் அவரது வீட்டுக்கு சென்று மஞ்சுளாவுடன் உல்லாசமாக இருந்துவந்தார். இதனை ஒரு நாள் ரித்தேஷ் பார்த்துவிட்டு தந்தையிடம் கூறிவிட்டான். இதனால் அவர்களது கள்ளக்காதலுக்கு தடை ஏற்பட்டது. 

எனவே மஞ்சுளாவை சந்திக்க முடியாமல் இருந்து வந்தார் நாகராஜ். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் டியூஷனுக்கு சென்ற ரித்தேஷ் சாயை  கார்த்திகேயன் அழைத்து வர சென்றபோது நாகராஜ் என்பவர் அழைத்து சென்றதாக தெரிவித்தனர். இதனையடுத்து உடனே எம்.ஜி.ஆர். காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் ரித்தேசை கொலை செய்து அறையிலேயே உடலை மறைத்துவைத்தார். 

அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சொந்த ஊருக்கு சென்றார். திருவண்ணாமலை ஐயங்குள தெருவில் ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

செல்போன் கடையில் நேற்று மாலை ஒரு வாலிபர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். பின்னர் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜ் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கள்ளக்காதல் பிரச்சனையில் சிறுவனை கடத்தி படுகொலை செய்த வழக்கில் கைதானவர் என்பது தெரியவந்தது. இந்த கொலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கொலை செய்தது யார்? சென்னை கொலை வழக்கில் தொடர்புள்ளவர்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.