திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன் (65). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு பிரேம்குமார் (26) என்ற மகன், லாவண்யா என்ற மகள் உள்ளனர். லாவண்யாவுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். கணேசனுக்கு சொந்தமான விவசாய நிலம் அவலூர்பேட்டை சாலை ஆர்ப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் உள்ளது. கிராமத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் இந்த விவசாய நிலம் உள்ளது. கணேசன் விவசாய நிலத்தில் வீடு கட்டி தனது மனைவியுடன் தங்கி விவசாயம் செய்து வந்தார். இவர்களது வீட்டின் அருகே ஆங்காங்கே ஒருசில வீடுகள் உள்ளது.

வழக்கம்போல கணேசன் வீட்டின் வெளியே நேற்றிரவு கட்டிலில் படுத்து உறக்கிகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் கணேசனை கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில், கணேசனின் அலறல் சத்தம் மனைவி ஓடிவந்தார். அப்போது, கணேசன் கழுத்து பகுதியிலும், மார்பு உள்ளிட்ட வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமான கொலை நடைபெற்றதா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.