கணவனைக் கொலை செய்துவிட்டு புழல் சிறையில் கள்ளக்காதலுடன் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும்  புதுமணப்பெண் அனிதா, ‘’நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள் என்ற காரணத்துக்காக கதிரவனை கொலை செய்ய திட்டமிட்டேன்'' என  போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூர் நியூ பீச் கடற்கரையில் கணவர் கதிரவனுடன் கண்ணாமூச்சி விளையாடி அவரது உயிரோடு விளையாடி முடித்தார் அனிதா. அனிதாவின் இந்த விளையாட்டில் பகடைக்காயான அவளது காதலன் ஜெகன் கதிரவனை கொடூரமாகத் தாக்கினார். இந்த வழக்கில் அனிதாவும் அந்தோணி ஜெகனும் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அடையாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற கதிரவன் நேற்று இறந்தார். இதைத்தொடர்ந்து முதலில் வழிப்பறி வழக்காகப் பதிவு செய்த திருவான்மியூர் போலீஸார் அதைக் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். இந்த வழக்கில் அனிதா ஏன் கதிரவனைக் கொலை செய்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், அந்தோணி ஜெகனைவிட மூன்று வயது மூத்தவள் அனிதா. கல்லூரிக்கு பஸ்ஸில் செல்லும்போது அவருக்கு இடம்பிடித்து கொடுத்துள்ளார் அந்தோணி ஜெகன். இந்தப் பழக்கம் நட்பாகி மாறி காதலாக மலர்ந்துள்ளது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவசர அவசரமாக அனிதாவுக்கும் கதிரவனுக்கும் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். திருமணத்துக்குப்பிறகு அனிதா காதலையும் காதலன் அந்தோணி ஜெகனையும் மறந்துவிடுவார் என்று அவரின் பெற்றோர் கருதியுள்ளனர். ஆனால், அனிதா, கதிரவனுடன் சேர்ந்து வாழாமல் இருந்துள்ளார். 

காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று அனிதாவின் பெற்றோர் கருதியுள்ளனர். கதிரவனும் பொறுமையாக இருந்துள்ளார். திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்குப்பிறகு ஜாலியாக வெளியில் செல்லலாம் என்று அனிதா அழைத்ததும் கதிரவனுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதனால், இருவரும் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்து தனிமையில் மனம்விட்டுப் பேசியுள்ளனர். 

அப்போதுதான் கதிரவனின் தலையில் சுத்தியல், இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டார் அந்தோணி ஜெகன். திட்டமிட்டப்படி அனிதாவும் தாலிச்செயின் உட்பட அவர் அணிந்திருந்த நகைகள் வழிப்பறி செய்யப்பட்டதாக நடித்து நாடகமாடியுள்ளார். எங்களின் விசாரணையில் அனிதா நாடகமாடியது தெரியவந்தது. கதிரவனை கொலை செய்த அந்தோணி ஜெகனையும் உறுதுணையாக இருந்த அனிதாவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து கள்ளக்காதல் காட்சிகளை பார்த்து தான் அனிதா இப்படி கொடூர நாடகத்தில் இறங்கியிருக்கமுடியும் என்று தெரிகிறது.