செய்யாறில் ஓடும் பேருந்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சதீஷ்குமார் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே கோபி, ஜீவா ஆகிய இருவரும் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கடந்த 2017-ல் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். ஸ்ரீதர் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என ஸ்ரீதரின் ஓட்டுநர் தினேஷ் மற்றும் மைத்துனர் தணிகா ஆகியோரிடையே நடைபெறும் `கேங் வார்’ காஞ்சிபுரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே உள்ள செய்யாறு பகுதியில் தினேஷ் ஆதரவாளரான சதீஷ்குமார் என்பவர் பேருந்திலேயே வைத்து 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது தணிகா ஆதரவாளர் வழக்கறிஞர் சிவக்குமாரை வெட்டிய வழக்கு உள்ளது.

இதற்குப் பழி தீர்ப்பதற்காக தினேஷ் ஆதரவாளர்கள், தணிகாவின் ஆதரவாளர்களான காஞ்சிபுரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்த கருணாகரன், விக்னேஷ் ஆகியோரை வெட்டினார்கள். இதில் கருணாகரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கடந்த மாதம் தினேஷ் மற்றும் `பொய்யாகுளம்’ தியாகு ஆகிய இருவரையும் கைது செய்து நேற்று முன்தினதம் அவர் குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனாலும், சிறையில் இருந்தாலும் பழிக்கு பழி வாங்க வேண்டும் என தினேஷ் கொலைவேறியில் இருந்து வந்தார்.  

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் நேற்று காலை இரு இளைஞர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வழியில் பன்னூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அங்கு வேகத்தடை இருந்ததால் வாகனத்தை மெதுவாக இயக்கினர். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 10 பேர் கொண்ட கும்பல், அவர்களது வாகனத்தை வழிமறித்து, இருவர் மீதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில், பயங்கர சத்தத்துடன் வெடித்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி இருவரும் நிலைகுலைந்து சாலையில் விழுந்தனர். அப்போது அந்த மர்ம கும்பல் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அத்துடன் கொலையானவர்களின் பைக்கையும், மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் தணிகாவின் நெருங்கிய கூட்டாளிகளான `மார்க்கெட்’ ஜீவா மற்றும் கோபி ஆகியோர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் செய்யாற்றில் ஓடும் பேருந்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சதீஷ்குமார் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே கோபி, ஜீவா இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற கேங் வாரில் இதுவரை 10 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.