திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவன் உட்பட 3 பேரை 8 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மபொசி நகரை சேர்ந்தவர் ஆகாஷ்(19). கல்லூரி மாணவன். அவரது நண்பர்கள் சதீஷ்(25), விமல்(24). இவர்களும் அதே பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் 3 பேரும் நேற்றிரவு 8.45 மணி அளவில் கும்மிடிபூண்டி ரயில் நிலையம் அருகே பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர். 

பயங்கர ஆயுதங்களுடன் 3 பேரையும் கொலை செய்ய முயன்றதால், அவர்கள் உயிர் பயத்தில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றனர். ஆனால் முதலில் கல்லூரி மாணவன் ஆகாஷை மறித்த கும்பல் அரிவாளால் சராமாரியாக வெட்டி சாய்த்தனர். பின்னர் 20 மீட்டர் தொலைவில் சதீஷை மடக்கி வெட்டினர். 

தலையில் பலத்த வெட்டுபட்ட சதீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொடூர ஆயுதங்களை காட்டிக் கொண்டு கொலை வெறியில் விரட்டியதால் பொதுமக்கள் யாரும் அந்த கும்பல் அருகில் செல்ல முடியவில்லை. அடுத்த 50 மீட்டர் தொலைவில் நடுரோட்டில் விமலை ஓட ஓட வெட்டி சாய்த்தது அந்த கும்பல். ஒரே நேரத்தில் 3 பேரை ஓட ஓட விரட்டி விரட்டி கொலை செய்த அந்த கும்பல் அங்கிருந்து சர்வ சாதாரணமாக ஆயுதங்களுடன் தப்பி சென்றது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சதிஷ் மற்றும் விமல் ஆகியோர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓரே நேரத்தில் 3 கொலை நடைபெற்றிருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.