பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 4 பேர் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை முகநூல் மூலம் நண்பர்களாகி தங்கள் காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்மததாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்தது. ஆனால் தற்போது அது சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் திருநாவுக்கரசு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ., படிக்கும் போது அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த ஒரு மாணவியுடன் நட்பாக பழகி உள்ளார்.

திருநாவுக்கரசு இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய சம்பவத்தில் அவருடன் படித்த சேலத்தை சேர்ந்த தோழிக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் மூலம்தான் ஏராளமான பெண்களின் செல்போன் எண்கள் திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களுக்கு கிடைத்துள்ளது. திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த போது அவர் போலீஸ் கண்ணில் சிக்காமல் இருக்க அடைக்கலம் கொடுத்ததும் இந்த தோழிதான் என்பதும் தெரிய வந்துள்ளது.

அவர் யார்? எங்கு இருக்கிறார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை பிடித்து விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக் தகவல்கள் வெளிவரும் என்பதால் அவரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

திருநாவுக்கரசுக்கு உதவிய தோழியை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் திருநாவுக்கரசுவின் தோழியை தேடி சேலம் விரைந்துள்ளனர்.