திலகவதியின் அக்கா கணவர் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், அதன் காரணமாக கூட கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று ஆகாஷின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்  திலகவதி படுகொலை தொடர்பாக விசிகவை குற்றம்சாட்டிய ராமதாஸுக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

கடந்த மே 8 ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் திலகவதி என்ற மாணவி கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆகாஷ் என்ற 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த சம்பவத்தில் விசிகவை தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார் ராமதாஸ்.

இதுதொடர்பாக சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது பதிலளித்த திருமா, “மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தோடு விசிகவை தொடர்புபடுத்தி எந்தவித ஆதாரமும் இல்லாமல் ராமதாஸ் அறிக்கை விட்டிருப்பது வேதனையளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதை விட, இதனை அரசியல்படுத்தி ஆதாயம் தேடுவதில்தான் அவர் குறியாக இருக்கிறார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆகாஷோ அவரது குடும்பத்தினரோ விசிகவை சார்ந்தவர்கள் அல்ல. அதற்கும் விசிகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

“ஆகாஷ் கொலை செய்யவில்லை என்றும், திலகவதியின் அக்கா கணவர் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், அதன் காரணமாக கூட கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று ஆகாஷின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் விசிகவை தொடர்புபடுத்துவதில் நியாயமில்லை. இனி விசிக மீது ராமதாஸ் அபாண்டமாக பழிசுமத்திக் கொண்டிருந்தால், அவர் மீது உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிட்டார். திலகவதி கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும் வரும் 16ஆம் தேதி விசிக சார்பாக விருத்தாச்சலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.