இளவரசனின் மரண விவகாரத்தில் வெளியான ரிப்போர்ட்டால், ஏகத்துக்கும் குஷியான ராமதாஸ் தனது அறிக்கையில் வரிக்கு வரி உள்ள வார்த்தைகள் திருமாவை கலகலக்க வைத்ததால், நேரடியாக பதிலடி கொடுக்காமல் வன்னி அரசுவை வைத்து ராமதாசுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திருமவளவன். வழக்கமாக ராமதாசுக்கு நேரடியாகவே பதிலடி கொடுத்து வந்த திருமாவளவன், இளவரசனின் மரண விவகாரத்தில் வன்னி அரசுவை வைத்து பதிலடி கொடுக்க வைத்துள்ளது யோசிக்க வைக்கிறது.

காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் இளவரசனின் மரணம், தற்கொலையே என்று நீதிபதி சிங்காரவேலு ஆணையம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை; மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது.நீதியரசர் சிங்காரவேலு அறிக்கை மூலம் பா.ம.க. மீது சுமத்தப்பட்ட பெரும்பழி துடைக்கப்பட்டிருக்கிறது.

இளவரசனின் உயிரிழப்பு வேதனையளிக்கும் துயரமான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரது மரணம் தொடர்பான விஷயத்தில் செய்யப்பட்ட அரசியல் மிகவும் அருவருக்கத்தக்கது. பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்தன. தங்களின் அரசியல் பசியை தீர்த்துக் கொள்ள இளவரசனின் மரணம் தான் அவர்களுக்கு உணவாக மாறியது.  பொய்யை மூலதனமாக்கி பிழைப்பு நடத்தின என காட்டமாகவே கூறியிருக்கிறார்.

அடுத்ததாக, இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் பா.ம.க. மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள் அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்களா? எனக் கேட்டுள்ளார்.

சாதியை முதலீடாகக் கொண்டு அரசியல் செய்யும் சில கும்பல்களுக்கும், அவர்களை திரைமறைவிலிருந்து இயக்குபவர்களுக்கும் இருந்ததே தவிர இளவரசனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை. இளவரசன் வாழ்வதை விட அவரை வைத்து தாம் வாழ வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்த அந்த தலைவர், இளவரசனை வைத்துக் கொண்டு தமக்குத் தேவையான விஷயங்களை சாதித்துக் கொண்டு, வேலை வாங்கித் தராமல் திட்டி விரட்டியடித்தார். இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவருக்கு துணையாக இருப்பதைப் போல நடித்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பகிரங்கமாகவே திருமாவளவனின் பெயரைச் சொல்லாமல் விமர்சித்து அறிக்கை விட்டிருந்தார்.

ராமதாஸின் அறிக்கையில் வரிக்கு வரி உள்ள வார்த்தைகள் திருமாவை கலகலக்க வைத்ததால், வன்னி அரசுவை  வைத்தே  ராமதாசுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திருமவளவன். வன்னி அரசு வெளியிட்ட பதிலடி அறிக்கையில், தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்று நீதிபதி சிங்காரவேலு ஒரு வழியாக அறிக்கையை முதல்வரிடம் கையளித்துள்ளார்.
ஜந்தாண்டுகள் பாவம் படாதபாடு பட்டு,காடுமேடெல்லாம் அலைந்து திரிந்து விசாரித்த பிறகு 
இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்துகொண்டார் என்று உண்மையை கண்டுபிடித்துள்ளார். 
இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?இந்த உண்மையை கண்டுபிடிக்க ஓய்வுபெற்ற நீதிபதி செய்த 
செலவு 2 கோடியே 6 லட்சம் ரூபாய்.

காதல் மனைவி திவ்யா இளவரசனிடமிருந்து பிரிக்கப்பட்ட நாள் ஜூலை4, 2013. அன்று தான் ரயில் தண்டவாளத்தில் இளவரசன் குறுதி வெள்ளத்தில் கிடந்தான்.அதற்கு முன்பு மகிழ்ச்சியாக கனவன் மனைவியாக சுற்றித்திரிந்தார்கள் திவ்யாவும் இளவரசனும்.காதல் வாழ்க்கைக்கு வில்லனாக சாதி வந்ததால் பிரிக்கப்பட்டனர். 
இதனால் இளவரசன் கொல்லப்பட்டான். இது தான் உண்மை. இளவரசனின் உடற்கூறாய்வை மேற்கொண்ட மருத்துவர் சம்பத்குமார் ‘வயர்’ என்னும் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். “ இளவரசன் கொல்லப்பட்டதற்கு தேவையான ஆதாரங்களை விட, தற்கொலை செய்யவில்லை என்பதற்கான ஆதாரம் நிறைய இருக்கின்றன” என்றார்.
இவர் ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர். தடயநிபுணரும் கூட. இப்படி நிறைய ஆதாரங்கள் இருந்தாலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிபிசிஐடி போலீசும், ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலுவும் தற்கொலை என்றே சொல்லி வந்தனர்.
இளவரசன் கொல்லப்பட்டதற்கு சாதியமும் அரசியல் பின்னணியும் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது தான்.
திவ்யாவை இளவரசன் அழைத்துப்போன பின்பு,  இளவரசனின் சொந்த ஊரான நத்தம் உள்ளிட்ட மூன்று சேரிகள் சூறையாடப்பட்டன. வீட்டிலிருந்த சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இதற்கு பின்னணியில் பாமக இருந்தது என்பது ஊருக்கே தெரிந்த உண்மை. 

ஆறு மணிநேரத்தும் மேல் மூன்று சேரிகளையும் நின்று நிதானமாக ராமதாசு கும்பல் தீக்கிரையாக்கியது.
இந்த சதி திட்டம் தர்மபுரி உளவு போலீசுக்கு தெரியாமலா இருக்கும்?படையெடுத்து போவதைப்போல போனார்கள். மரங்களை வெட்டிப்போட்டார்கள். காவல்துறை வந்துவிடக்கூடாது என்பது தான் அவர்களது திட்டம்.இப்படியான அத்தனை திட்டங்களுக்கும் உடந்தையாக மாவட்ட காவல்துறை இருந்தது. ஆனால் நீதிபதி சிங்காரவேலு அவர்கள் மாவட்ட காவல்துறையையும் எஸ்பி அஸ்ராகார்க்கையும் வானளவு புகழ்ந்து தள்ளியுள்ளார். இதிலிருந்தே தெரிகிறது விசாரணை கமிசனின் போக்கு.

உண்மைக்கு மாறாக, அரசு என்ன சொல்கிறதோ அதையே ஐந்தாண்டுகள் விசாரணை என்ற பெயரில் 
வெளியிட்டிருப்பது ஏமாற்றுவேலை அன்றி வேறென்னவாக இருக்க முடியும்? இளவரசனின் பச்சை படுகொலையை மறைக்க அரசு செய்த செலவு 2 கோடியே ஆறு லட்சமாகும். இப்படி அரசு சார்பாக போட்ட விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளை பார்த்தாலே ஆளும் வர்க்கங்களின் அறிக்கையாகத்தான் இருந்துள்ளன.

கடந்த 1991 ஆகஸ்டு 31 அன்று கொடியன்குளத்தை யாரும் மறந்திட முடியாது. போலீசாரே குடியிறுப்புக்குள் நுழைந்து வேட்டையாடினர். அப்பாவி மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கண்டத்து தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. உடனே, நீதிபதி கோமதிநாயகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நான்காண்டுகளில் அதாவது, 1999 ஆம் ஆண்டு கோமதி நாயகத்தின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. போலீசார் மீது எந்த தவறும் இல்லை என்று அதிகாரவர்க்கத்தின் குரலாக வெளியிடப்பட்டது.

அதே போல, 1999 ஜூலை 23 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் வைத்து 17 பேரை போலீசார் அடித்துக்கொன்றனர்.
அப்படி அடித்துக்கொல்லுமளவுக்கு அவர்கள் என்ன குற்றம் இழைத்தார்கள்? அவர்கள் என்ன சமூகவிரோதிகளா?
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை பார்த்த அப்பாவிகள்.  தங்களது கூலி உயர்வுக்காக  நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக போனார்கள். அவ்வளவு தான் அவர்கள் செய்த குற்றம். இதற்காக
போலீசார் பேரணியாக வந்த அப்பாவி மக்களை அடித்து விரட்டினார்கள். இதில் 17 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலைகளை விசாரிக்க நீதிபதி மோகன் தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது.
நவம்பர் 13,2000 ஆம் ஆண்டு நீதிபதி மோகன் தமது அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் 11 பேர் ஆற்றில் மூழ்கி இறந்ததாகவும், 6 பேர் ஆற்றில் மூழ்கும் முன் சாலையில் பெற்ற காயங்கள் என்று சொல்லி இருந்தார். பட்டப்பகலில் நீதி கேட்டு போராடிய மக்கள் கதற கதற அடித்து கொல்லப்பட்டதை மீடியாக்களே வெளிச்சம் போட்டு காட்டியது.  ஆனால் அதையெல்லாம் பொய்யென்று நீதிபதி மோகன் விசாரணை சொல்லிவிட்டது. 
அவ்வளவு தான் அந்த நீதி விசாரணை. செத்து போனவர்கள் போனது தான்.

2011, செப்டம்பர்11 ஆம் நாள் பரமக்குடியில், மாவீரன் இமானுவேல் சேகரனின் குருபூஜைக்கு சென்ற மக்கள் மீது போலீசார் வன்முறை நடத்தி துப்பாக்கி சூடு நடத்தியது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து தரதரவென இழுத்து சென்ற காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பின. நாடே கொந்தளித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்பாக நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை அமைக்கப்பட்டது.
2013 அக்டோபர் 13 ம்தேதி சட்டப்பேரவையிலேயே விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையில், “ போலீசார் தற்காப்புக்காகத்தான் சுட்டனர். அப்படி சுடாவிட்டால் பெரும் பாதிப்பு உருவாகி இருக்கும்”என்று சொன்னார் நீதிபதி சம்பத். அரசையும் போலீசையும் பாதுகாப்பதிலேயே தான்
இந்த விசாரணை ஆணையங்கள் செயல்பட்டு வந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம்.

அதனால் தான் சென்னை உயர்தீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள், “ இந்த விசாரணை ஆணையங்கள் எதற்காக அமைக்கப்படுகின்றன? எதற்காக இவ்வளவு செலவுகள்?எல்லாம் கண்காணிக்கப்பட வேண்டும்.” என்றார்.
தமிழ்நாடு புதிய தலைமைச்செயலகம் ஊழல் முறைகேடு தொடர்பாக நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை நடைப்பெற்றது.இந்த ஆணையத்துக்கு எதிராகவும் சம்மனை ரத்து செய்யக்கோரியும் முன்னாள் முதல்வர் கலைஞர் 
வழக்கு தொடுத்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள், ரகுபதி விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்தார்.

அப்போது இந்த விசாரணைக்கு 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக நீதிமன்றத்திலேயே கணக்கு காட்டினார்கள்.
அப்போது தான் நீதிபதி, எதற்காக இந்த விசாரணை? செலவுகள்? என்று வேதனையை கொட்டினார்.
இப்படி கடந்த கால விசாரணை ஆணையங்கள் எல்லாம் உண்மையை கொண்டுவராத ஆணையங்களாகவே இருந்துள்ளன.
அதிகாரவர்க்கத்தை பாதுகாக்கத்தான்ஓய்வுபெற்ற நீதிபதிகளின் விசாரணையும் அணுகுமுறையும் அமைந்து வந்துள்ளன.
அப்படி பார்க்கும் போது,இளவரசனின் படுகொலையில் நீதிபதி சிங்காரவேலு அவர்களிடம் எப்படி உண்மையை எதிர்பார்க்க முடியும்?

இந்த அறிக்கையை வைத்துக்கொண்டுதான் மருத்துவர் ராமதாஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குதி குதி என்று குதிக்கிறார். கடந்த காலங்களில் கொடியன்குளம் வன்முறை, பரமக்குடி படுகொலை, தாமிரபரணி படுகொலை என்று அத்தனை அரசபயங்கரவாதத்தையும் கண்டித்து அறிக்கை கொடுத்தவர் தான் மருத்துவர் ராமதாஸ். நேரடியாக போலீசு மீது குற்றம் சுமத்தினார்.

அந்த அரச பயங்கரவாதங்கள் எல்லாம் விசாரசணை ஆணையங்களால் இல்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிக்கை கொடுத்துவிட்டனர்.  அதற்காக படுகொலைகளே நடக்கவில்லை என்று ராமதாஸ் மன்னிப்பு அறிக்கை  தரமுடியுமா? அதே போலத்தான் இளவரசன் படுகொலை தொடர்பான விசாரணை ஆணையமும். ஆணையங்கள் எல்லாம் அதிகார வர்க்கம் பக்கம் நின்று தான்  பேசும். உண்மை ஒரு போதும் தோற்றுவிடாது. 

அதுமட்டுமல்ல இளவரசனின் மரண அறிக்கையால் திருத்தியடையாத திருமா, இளவரசன் படுகொலையை நீதிபதி சிங்காரவேலன்களால் மறைக்க முயற்சிக்கலாம். ஆனால், திவ்யாவுக்கு உண்மை தெரியும். திவ்யா ஒரு நாள் பேசுவார். அப்போது ராமதாசு, சிங்காரவேலன்கள் அம்பலப்பட்டு நிற்பார்கள் எனக் கூறியுள்ளார்.

ஒருவேளை நீங்கள் அதிமுக கூட்டணியில் இருந்திருக்கவில்லை என்றால் , சிங்காரவேலு தீர்ப்பு இளவரசன் கொலை செய்யப்பட்டார் என்று சொல்லி இருப்பார்களா?  உங்கள் மீது பழி சுமத்துவதற்காக இதை கேட்கவில்லை. கடந்து வந்த பாதைகள் இப்படியான தீர்ப்புகளை தான் வழங்கியிருக்கின்றது என சந்தேகத்தையும் கிளப்புகிறது விசிக.