விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், ஒரு தலைக் காதல் கொலைகளில் பெரும்பாலானவை அவற்றையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் ஒரு கும்பலால் நடத்தப்பட்டவை தான். பிற சமுதாயத்து பெண்கள் அனைவரும் தங்களால் காதலிக்கப்படுவதற்காகவே பிறந்தவர்கள் என நினைக்கும் அவர்கள், தங்களின் நாடகக் காதலை நம்பி ஏமாறும் பெண்களிடமிருந்து பணம் பறிக்கின்றனர்; காதலிக்க மறுக்கும் பெண்களை படுகொலை செய்கின்றனர். இத்தகைய குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கும்பல் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பது தான் இத்தகைய குற்றங்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றன.

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளை திட்டமிட்டு அரங்கேற்றுவது சமுதாயத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.  இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வழிகாட்ட வேண்டிய தலைவர்கள், இத்தகைய செயல்களை ஆதரிப்பதும், தூண்டி விடுவதும் தான் இத்தகைய கொலைகளுக்கு மூல காரணம் ஆகும். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும் இதில் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். இன்னும் சிலரோ, இத்தகைய கொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும், வேறு சிலரோ இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் கூறி மிகவும் எளிதாக கடந்து செல்கின்றனர். இத்தகையப் போக்கு மிகவும் ஆபத்தானது. நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில்  கடுமையான சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு  நேற்று வந்திருந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்திக்கையில்; விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட திலகவதி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். உறவினர்களே இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருந்தும், விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதேபோன்று தலித் மக்கள் மீது தொடர்ந்து பழிசுமத்தினால் பாமக தலைவர் ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் இவ்வாறு அவர் கூறினார்.