புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருக்கிறது நொடியூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) . 13 வயது சிறுமியான இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பரவுதல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் வீட்டில் இருந்த சிறுமி நேற்று காலை தண்ணீர் எடுப்பதற்காக அருகே இருக்கும் குளத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை தேடி சென்றுள்ளனர்.

குளக்கரையில் சிறுமியை காணாததால் பல இடங்களில் தேடினர். அப்போது அங்கிருக்கும் ஒரு தைல மரக் காட்டில் உடலில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் சிறுமி கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை நடந்து வந்த நிலையில் நேற்று இரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர்.

காட்டுக்குள் காயங்களுடன் சிறுமி கிடந்த நிலையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. நாடு முழுவதும் 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்ததால் குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருந்தது. இதனிடையே தற்போது மீண்டும் கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.