கடலூர் அருகே கிராமத்திற்குள் சிங்கம் புகுந்ததாக சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவால் கிராம மக்கள் அச்சம் அடைந்து வீட்டிற்குள் தஞ்சம் அடைந்து கொண்டனர்.

விளை நிலத்திற்குள் புகுந்த சிங்கம் ?

தமிழக வனப்பகுதிகளில், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குள் மட்டுமே உள்ளன. இந்தநிலையில் கடலூர் அருகே மாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருவரது விளை நிலத்தின் வழியாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிங்கம் ஒன்று புகுந்ததாக தகவல் பரவியது. அந்த சிங்கம் கர்ஜித்தபடி விளை நிலத்தின் வழியாக நடந்து செல்வது போன்ற வீடியோ, முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அச்சமடைந்த மாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட மக்கள் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர்.

விளை நிலத்தில் வனத்துறை சோதனை

இதனையடுத்து போலீசாருக்கு மற்றும் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதிக்கு வந்த வனத்துறையினர். விளை நிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கம் நடமாட்டம் தொடர்பாக எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. இதனையடுத்து சமூக வலை தளங்களில் வெளியான வீடியோவை
வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது கடந்த ஆண்டு மார்ச் மாதம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் சிங்கம் புகுந்த வீடியோ என்பதும், அதனை யாரோ மர்மநபர் பொதுமக்களிடையே வதந்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டதும் தெரியவந்தது.

வீடியோ வெளியிட்ட நபர் யார்?

விளை நிலங்களுக்குள் சிங்கம் புகுந்ததாக வீடியோவை மாவடிபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் போலியாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டது தெரியவந்தது. அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ போலியானது என்பதை தெரிந்தபின்தான் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.