கொலை செய்து விட்டு கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் உங்களுக்கு போட்டோ தானே எடுக்கனும் மாஸ்கை கழட்டி போஸ் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (85). இவருக்கும் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கும் நிலம் தொடர்பான பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்த இடத்தை கடந்த திங்கள்கிழமை தூய்மைப்படுத்தும் பணியில் இளங்கோவன் தனது உறவினர்களான பழனியாண்டவர் நகரைச் சேர்ந்த பழனிச்சாமி, ராமபட்டினம் புதூரை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோருடன் இணைந்து செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த நடராஜன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் நடராஜனுக்கும், இளங்கோவன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணியை சுட்டார். இதில் பழனிச்சாமிக்கு தொடைப்பகுதியிலும், சுப்பிரமணிக்கு வயிற்றுப் பகுதியிலும் குண்டு பாய்ந்தது.

இதில், பழனிச்சாமி பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்து கொண்டார். சுப்பிரமணி (68) மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குண்டு அகற்றப்பட்டது. இருப்பினும் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பழனி நகர் போலீசார் நடராஜன் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், திரையரங்கு உரிமையாளர் நடராசன் பிள்ளை அவர்களை சிறையில் அடைப்பதற்கு முன்பாக போலீசார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்கள் சுற்றி நின்று படம் எடுப்பதை பார்த்த நடராஜன் பிள்ளை தான் முகத்தில் அணிந்து இருந்த மாஸ்கை கழட்டி முகத்தை படமெடுக்க காண்பித்தார். கொலை செய்து விட்டு கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் உங்களுக்கு போட்டோ தானே எடுக்கனும் மாஸ்கை கழட்டி போஸ் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.