நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவியால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சென்னப்ப நாயக்கனூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகள் ஜான்சிராணி. ஊத்தங்கரையில் உள்ள தனியார் மகளிர் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவருக்கும், அவரது தாய்மாமன் மகன் சரவணன் என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஃபேஸ்புக்கில் திருச்சியைச் சேர்ந்த ஒரு இளைஞனுடன் ஜான்சிராணி காதல் மயக்கத்தில் இருந்துள்ளார். இதனால் தாய்மாமனை திருமணம் செய்ய ஜான்சிராணி மறுத்து வந்துள்ளார். 

ஆனாலும் சரவணனைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஜான்சிராணியின் உறவினர்கள் வற்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஊரில் திருவிழா நடந்திருக்கிறது. உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில், சரவணனை ஜான்சிராணி வீட்டிற்கு அழைத்துள்ளார். தனக்கு நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல், வருங்கால மனைவி அழைத்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் சரவணன் சென்றுள்ளார்.

அப்போது அனைவருக்கும் ஜூஸ் கொடுத்த ஜான்சிராணி, சரவணனுக்கு கொடுக்க வைத்திருந்த ஜூசில் மயக்க மருந்தைக் கலந்ததாக கூறப்படுகிறது. அதைக் குடித்த பின்னர், காற்றோட்டமாக வெளியில் சென்று பேசலாம் என்று சரவணனை, ஜான்சிராணி அழைத்துச் சென்றுள்ளார்.

சாலையில் செல்லாமல் ஏரிக்கரை ஓரமாக அவர்கள் சென்றதாக உறவினர்கள் கூறியுள்ளனர். சிறிது தூரம் சென்றதும் சரவணன் மயக்கம் அடைந்து கீழே விழவே, அங்கு மறைந்திருந்த தனது காதலனுடன் சேர்ந்து கொண்டு கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து அவரை ஜான்சிராணி சரவணனை தாக்கியுள்ளார். பின்னர் ஒன்றும் நடக்காதது போல் ஜான்சிராணி வீட்டிற்குச் சென்றுவிட, சரவணன் ரத்தக் காயங்களுடன் சாலை ஓரம் கிடப்பதைக் கண்ட உறவினர்கள், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சைக்குப் பின்னர் சரவணனுக்கு சுய நினைவு திரும்பவே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தான் ஜான்சிராணியின் திட்டம் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஊத்தங்கரை போலீசார் ஜான்சிராணியைக் கைது செய்தனர். அவரது ஃபேஸ்புக் காதலன் என சொல்லப்படும் திருச்சியைச் சேர்ந்த இளைஞனைத் தேடி வருகின்றனர். பலத்த காயமுற்ற சரவணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.