சென்னையில் மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் இரும்பு கைப்பால் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதியம்மாள் (65). இவரது கணவர் ஆறுமுகம் இறுந்துவிட்டார்.  இவர்களுக்கு 2 மகள், 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மகேஷ்குமார்(38) மதுரை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்று விட்டார். 2 குழந்தைகளுடன் கீழ்தளத்தில் மகேஷ்குமார் தனியாக வசித்து வருகிறார். மேல்தளத்தில் குடிசை அமைத்து ஆதியம்மாள் வசிக்கிறார்.

மனைவி இல்லாத வேதனையில் மகேஷ்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அடிக்கடி தாயிடம்  மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். நேற்றிரவும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். ஆத்திரமடைந்த மகேஷ்குமார் இரும்பு கம்பியால் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, ஆதியம்மாள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆதியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, மகேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.