சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் வசித்து வருபவர் ரீட்டா ஜானகி லங்காலிங்கம். லான்சன் டொயோட்டா ஷோரூமின் இணைத் தலைவராக இருந்துவந்த இவரது கணவர் லங்காலிங்கம் இதே நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ரீட்டா தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் அவரது உடலைக் கைப்பற்றிய நுங்கம்பாக்கம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொருளாதார மந்தநிலை காரணமாகத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ரீட்டா தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால்,போலீசார் நடத்திய  விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

லங்காலிங்கமும், ரீட்டாவும் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள். ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கார் ஷோரூம் நடத்தி வரும் அவர்களுக்குக் கிட்டத்தட்ட ரூ.30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பட்டுள்ளது. ஆனால், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கான பொருளாதார நெருக்கடி இல்லை. அதுமட்டுமல்ல அவர்களுக்கு ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. ஏதாவது ஒரு சொத்தை விற்றாலே மொத்த கடனையும், சரிவையும் சரி செய்யும் நிலையில்தான் இருந்தனர். அதனால் தற்கொலைக்கு இது மட்டுமே காரணமாக இருக்கமுடியாது.

ஒரே நிறுவனத்தில் கணவரும் மனைவியும் நிர்வாகிகளாக இருந்ததால் இருவரும் ஒரே அலுவலகத்திற்குத் தான் எப்போதும் செல்வார்கள். இந்த நிலையில் அலுவலகத்தில் பொறுப்பிலிருந்த ஒருவரை பணி நீக்கம் செய்யச் சொல்லி லங்காலிங்கத்திடம் ரீட்டா சொல்லியிருக்கிறார். லங்காலிங்கம் மிகவும் மென்மையானவர். யாரும் தம்மைக் குறை சொல்லிவிடக் கூடாது என்று நினைப்பவர். அதனால், ‘பொறுமையாக பார்த்துக்கொள்ளலாம். நீக்கம் குறித்து பொறுமையாக யோசிப்போம் என்று ரீட்டாவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், அவருடைய வேலைகள் சரியில்லை என்றும் நீக்கித்தான் ஆக வேண்டும் என்று ரீட்டா தொடர்ந்து சொல்லி வந்துள்ளார். இதுதொடர்பாக சில நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துவந்து வருக்கிறது.

ரீட்டா தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது, இருவருக்கும் இதுதொடர்பாக மீண்டும் பிரச்சினை வந்துள்ளது. இதனால் கணவர் மீது ரீட்டா கோபத்தில் இருந்துள்ளார். மனைவியை வீட்டில் விட்ட லங்காலிங்கம் வழக்கம் போல கோல்ஃப் விளையாட சென்றுவிட்டு, அதன்பிறகு ஹோட்டல் ஒன்றில் தங்கிவிட்டார்.

இந்த நிலையில் வீட்டில் படுக்கையறை கதவில் உள்ள திரைச்சீலையைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்திருக்கிறார் ரீட்டா. தூக்கில் தொங்கிய நிலையில், பாதியிலேயே திரைச்சீலை அறுந்து விழுந்திருக்கிறது. இதனால் கீழே விழுந்த ரீட்டா தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக சொல்கிறார்கள்.