வீட்டில் தனியாக இருந்த மாணவி கழுத்து அறுக்கபட்டு இறந்த மர்ம மரணம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11ம் வகுப்பு மாணவி :
திருப்பூர் மாவட்டம் உடுமலை சிங்கபூர் நகர் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவர் தனியார் கோழிப்பண்ணையில் சூப்ரவைசராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஹர்த்திகா ராஜ் உடுமலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் வேலைக்கு சென்றிருந்த ஹர்த்திகா ராஜின் தாய் கற்பகவள்ளி 6.40 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் சமையலறை பகுதியில் ஹர்த்திகாராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டிருந்த நிலையில் சமையலறையில் பயன்படுத்தும் மரப்பிடி போட்ட கத்தி, ரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்தது. இதைக் கண்டதும் கற்பகவள்ளி அதிர்ச்சி அடைந்து அலறினார்.
கொலையா ? தற்கொலையா ? :
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹர்த்திகா ராஜ் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் வீட்டில் தனியாக இருந்த மாணவி தற்கொலை செய்துகொண்டரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேதபரிசோதனை செய்த பின்புதான் கொலையா தற்கொலையா என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த மாணவி கழுத்து அறுக்கபட்டு இறந்த சம்பவம் இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைக்கு காரணம் காதல் பிரச்சனையா அல்லது குடும்ப பிரச்சனையா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
