தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள குப்பிநயக்கன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (58). தச்சுத் தொழில் செய்து வரும் இவருக்கு மனைவி ராஜாத்தி (50) மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். 

இந்நிலையில் தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த 49 வயதுள்ள பெண் ஒருவருடன் லட்சுமணனுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் தேனியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கணவரின் கள்ளத் தொடர்பு குறித்த மனைவி ராஜாத்திக்கு தெரிய வர இருவரும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது குறித்து ராஜாத்தி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாத இறுதியில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் இருவரிடமும் விசாரணை நடத்திய மகளிர் காவல்துறையினர், வியாழக்கிழமையான இன்று லட்சுமணன் அவரது கள்ளக் காதலி ஆகியோரை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வருமாறு கூறியிருந்தனர். இந்நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு மனைவி ராஜாத்தியை அவரது கணவர் லட்சுமணன் நேற்று இரவு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு ராஜாத்தி மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த லட்சுமணன், வீட்டில் இருந்த அரிவாள் மனையால் ராஜாத்தி யின் தலையில் தாக்கியுள்ளார்.‌ மேலும் சேலையால் ராஜாத்தி யின் கழுத்தை இறுக்கி வெறித்தனமாக கொலை செய்துவிட்டு கண்ணடமனூர் காவல் நிலையத்தில் சரனடைந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே இன்று மருத்துவமனைக்கு வந்த லட்சுமணன் - ராஜாத்தி தம்பதியினரின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த கள்ளக்காதலியை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

இருந்த போதிலும் தங்கள் தாயின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து இறந்த ராஜாத்தியின் மகன் ராமகிருஷ்ணன்(26) அளித்த புகாரில் கண்டமனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : அச்சச்சோ..! உலகில் இந்தியாவில் தான் அதிக கொரோனா உயிரிழப்பு.. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இதையும் படிங்க : அலெர்ட்.! இன்று தமிழகத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுது மக்களே.! எங்கெல்லாம் தெரியுமா ?