பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு, பாதுகாப்புக்கு 100 என்ற எண்ணை பயன்படுத்தி வரும் நிலையில், அந்த எண்ணிற்கு போன் செய்து போலீசாரை வம்பிழுக்க வகையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு, பாதுகாப்புக்கு 100 என்ற எண்ணை பயன்படுத்தி வரும் நிலையில், அந்த எண்ணிற்கு போன் செய்து போலீசாரை வம்பிழுக்க வகையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் அவசர உதவி மற்றும் பாதுகாப்புக்கு 100 எண்ணை தொடர்பு கொண்டு வருகின்றனர். தங்கள் பகுதியில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை விபத்து உள்ளிட்டவை களையும் 100 மூலமாக கூறிவருகின்றனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில நேரங்களில் 100க்கு அழைக்கும்போது ரிங் மட்டும் போகிறது, ஆனால் யாரும் போன் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதே நேரத்தில் அவர்கள் போன் எடுத்தாலும் மறுமுனையில் இருப்பவர்களுக்கு அவர்கள் பேசுவது சரியாக கேட்பது இல்லை என்ற புகாரும் உள்ளது.

சில நேரங்களில் தேவையில்லாத நபர்கள் அவசியமின்றி 100க்கு அழைத்து போலீசுக்கும் இடையூறு செய்வது போன்ற அழைப்புகளும் இந்த வரிசையில் உள்ளன. மொத்தத்தில் 100 என்றதொலைபேசி எண் குறித்து சர்ச்சைகளுப் புகார்களும் உள்ளன. இது குறித்து காவல் துறைக்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன, அதேபோல 100 என்ற எண்ணுக்கு அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து செல்லும் வகையில், மாடல் கண்ட்ரோல் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக ஆர்வலர் திரைப்பட தயாரிப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி வரும் வாராகி என்பவர், 100க்கு அழைத்து, போலீசாருடன் ஏடாகூடமாக உரையாடியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவர் போலீஸிடம் வம்பிழுக்கும் வகையில் பேசியுள்ள விவரம் பின்வருமாறு:
வாராகி: வணக்கம்மா நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் இருந்து பேசுகிறேன்..
போலீஸ்: ஓகே சார் என்ன விஷயமாக கால் பண்ணி இருக்கீங்க சார்..
வாராகி: ஒரு ஆட்டோ டிரைவர் டிமாண்ட் பண்றாரும்மா
போலீஸ்: புகார் கொடுக்க அழைத்திருக்கீங்களா சார்..
வாராகி: ஆமாம்மா அதுக்குத்தானேம்மா இந்த 100.
போலீஸ்: சார்.???
வாராகி: 100க்கு புகார் கொடுக்கத் தானே கால் பண்ணுவாங்க.
போலீஸ்: ஆமாங்க சார்.. என்ன பிரச்சனை சார்.. எங்க சார்.?
வாராகி: அதான் இப்போ சொன்னேனேம்மா. நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் இருக்கிறேன் இங்கு ஒரு ஆட்டோ டிரைவர் ரொம்ப டிமாண்ட் பண்ணுகிறார்.
போலீஸ்: சென்னை நுங்கம்பாக்கமாங்க சார்.
வாராகி: ஆமாம்மா நீங்க எந்த ஊருமா இது துபாயா.???
போலீஸ்: தமிழ்நாடு கன்ட்ரோல் ரூமில் இருந்து பேசுகிறேன் சார், கொஞ்சம் சரியா பேசுங்க தெளிவா சொல்லுங்க சார்.
வாராகி: மறுபடியுமா?
போலீஸ்: சார் கொஞ்சம் சத்தமாக பேச முடியுமா?
வாராகி: இதுக்குமேல எப்படி சத்தமா பேச முடியும்மா? அவசர போலீசுக்கு போன் பண்ணி இருக்கேம்மா
போலீஸ்: ஆட்டோ டிரைவர் அதிக காசு கேட்டு உங்களிடம் பிரச்சனை செய்கிறாரா,
வாராகி: பிரச்சினை செய்யவில்லை டிமாண்ட் செய்கிறார்...
போலீஸ்: நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் சார், உங்க பெயர் சார்
வாராகி: வாராகி
போலீஸ்: ஒருமுறை உங்கள் லொகேஷனை மட்டும் சொல்லுங்கள் சார்..
வாராகி: முடியலம்மா... நான் போன வச்சிடறேன்.. என போன் துண்டிக்கப்படுகிறது.

மேலும் இந்த ஆடியோவை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவசர போலீஸ் 100 அவலம்.. போலீஸ் ஸ்டேஷன் என்று சொன்னால், ரயில்வே ஸ்டேஷனான்னு கேக்குறாங்க. என சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளார்.காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சரியாக தகவல் சொல்லாமல் அவர்களை அலைக்கழிப்பது போல பேசிவிட்டு ஏதோ காவல்துறை சரியாக செயல்படாதது போல அவர் இந்த ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த நபர் வேண்டுமென்றே முழுவிவரத்தையும் சொல்லாமல் பேசுகிறார், நமக்கு உதவி வேண்டுமென்றால் நாம் தான் முழு விவரத்தை தெரிவிக்க வேண்டும் என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
