கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் சேர்ந்த 28 வயதான வங்கி பணியாளருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அலிகாரில் உள்ள, தீன்தயாள்  உபாத்யாய் மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் பெண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

சம்பவத்தன்று குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் நள்ளிரவில் அந்தப் பெண் தங்கியிருந்த அறைக்கு வந்ததாக கூறப்படுகிறது, அப்போது அவர் அந்த பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் மருத்துவரால் தனக்கு ஏற்பட்ட நிலைகுறித்து அந்தப் பெண் தனது பெற்றோர்களிடம் தெரிவித்தார், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே மருத்துவமனைக்கு வந்த போலீஸார் அந்தப் பெண்ணிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி பிரிவு 376 ( 2)-ன் கீழ் மருத்துவர் மீது  பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்ததுடன், குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரை கைது செய்தனர். 

அதைத்தொடர்ந்து அந்த மருத்துவர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் இது குறித்து தெரிவித்த போலீசார், குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர்  டியூட்டி இல்லாதபோதும் திட்டமிட்டு இரவு மருத்துவமனைக்கு, குறிப்பாக பெண்கள் வார்டுக்குள் நுழைந்துள்ளார். நள்ளிரவில் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இந்த  மருத்துவர் இதுவரை இரண்டு முறை அந்தப் பெண்ணை கற்பழித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த மருத்துவமனையில் இது போன்று இன்னும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.