பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, இளைஞர்கள் தற்போது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.விபத்தால் காயமடைந்து ரத்த காயங்களோடு வருபவர்களை பார்த்து Bike Racersஅதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

பைக் ரேசில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

இன்றைய இளைஞர்கள் ஒரு பக்கம் ஐடி, சாஃப்ட்வேர் துறையில் உயர்ந்த நிலையில் தங்களை நிலை நிறுத்தி தங்களுக்கென ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.. இது ஒருவகை.. ஆனால் மற்றொரு வகை இளைஞர்கள் ஏன் பிறந்தோம்.. என்பதை அறியாமல் சிறுவயதிலேயே குடி, போதை என்ற தவறான பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை நாசமாக்கி வருகின்றனர். குறிப்பாக இந்த வகை இளைஞர்கள் தான் பைக் ரேஸ் என்ற பைக் ஸ்டண்ட் என்று சொல்லப்படும் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்றோர்களை நச்சரித்து விலையுயர்ந்த பைக்கை வாங்கி பந்தாவாக வலம் வரும் இளைஞர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் தங்கள் பைக்குகளை வைத்து ரேஸ்ஸில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்று ரேஸ்ஸில் ஈடுபடும் இளைஞர்களால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஆற்படுவதைவிட பைக் ரேசர்களால் மற்றவர்களுக்கு விபத்து ஏற்படுகிறது. இதனையடுத்து பைக் ரேசர்களை காவல்துறையினர் அடிக்கடி கைது செய்து சிறையில் அடைத்தாலும் கூட சில நாட்களில் வெளியே வந்து மீண்டும் இதே தவறைத்தான் அவர்கள் செய்கிறார்கள். 

ஐசியூவில் பணியாற்ற நீதிபதி உத்தரவு

இதற்கு ஒரு தீர்வு என்பதே இல்லாமல்தான் இருந்தது. தவறு செய்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தினால் ஒழிய இது போன்ற தவறுகள் மீண்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் உள்பட 4 பேர் கடந்த மாதம் 20-ம் தேதி பைக் ரேசில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இளைஞர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்பு கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார். இதையடுத்து பைக் ரேசில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் ஒரு மாதம் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். 

ரத்த காயங்களை பார்த்து அலறும் இளைஞர்கள்

இந்தநிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் பைக் ரேசர்கள், தினந்தோறும் விபத்து காயத்தால் அடிபட்டு வரும் நபர்களை பார்த்து அலறி துடித்து வருகின்றனர். பிள்ளைகளை இழந்த பொற்றோரும், தந்தையை இழந்த குழந்தைகளும் தினந்தோறும் கண்ணீரோடு மருத்துவமனையில் அழுது துடிக்கும் காட்சிகளை பார்த்தவர்கள் இனி இது போன்ற பைக் ரேசில் ஈடுபடமாட்டோம் என வேதனையோடு தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று பணியாற்றும் இளைஞர்கள் அன்றாடம் நடக்கும் விபத்துகள்.. அதன்மூலம் பெற்றோர்கள் வடிக்கும் கண்ணீர் போன்றவற்றை பார்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாவார்கள். அது அவர்களுக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் பைக் ரேஸில் ஈடுபட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.