அதிமுக பெண் பிரமுகரின் அராஜகத்தை தட்டிக்கேட்ட ஆடிட்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் அந்த அதிமுக பிரமுகரின் மகன் உட்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

அதிமுக பெண் பிரமுகரின் அராஜகத்தை தட்டிக்கேட்ட ஆடிட்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் அந்த அதிமுக பிரமுகரின் மகன் உட்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் ஆக்கிரமிப்பு அத்துமீறல்கள் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்து வந்த ஆடிட்டர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சை கரந்தை சேர்வைகாரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (45) ஆடிட்டர் ஆக இருந்து வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான கட்டண குளியலறை டெண்டர் எடுத்து நடத்தி வருகிறார். வீட்டுக்கு அருகிலேயே ஆடு கோழி மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தங்கள் பகுதியில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதை முன்னின்று தீர்த்து வைக்கக் கூடியவராகவும் மகேஸ்வரன் இருந்துவந்தார். அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு எதிராகவும் தட்டிக்கேட்டு வந்தார். தெருவில் உள்ளவர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் அதை முதல் ஆளாக நின்று தீர்த்து வைப்பவராகவும் இருந்து வந்தார். இதனால் பெருமக்கள் அனைவரும் மகேஸ்வரனை பொதுநலவாதி என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் ஆடிட்டரின் பண்ணைவீடு எதிரே உள்ள குளியலறையை கடந்த பத்து வருடங்களாக டெண்டர் எடுத்து நடத்தி வந்தார். ஆனால் அதற்கான பணத்தை அவர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல அங்கிருந்த குளத்தை எடுத்தும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் அதற்கும் பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கோயில் திருவிழா என கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து அதையும் அவர் மோசடி செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு எதிராக ஆடிட்டர் மகேஸ்வரன் குரல் கொடுத்து வந்தார். இதில் அந்தப் பெண்ணுக்கும் மகேஸ்வரனுக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு தனது பண்ணையில் தங்கி இருந்த மகேஸ்வரனை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி விட்டது. இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பெண் பிரமுகர் மற்றும் அவரது மகன் இட்லி கார்த்திக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் என்ன என்றும் கொலை செய்தது யார் என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.