விருதுநகரில் திமுக எம்.பி. தனுஷ்குமாரின் சித்தப்பா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் கிராமம் மருத விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா(55). இவர் தென்காசி மக்களவை தொகுதி திமுக எம்.பி. தனுஷ்குமாரின் சித்தப்பா ஆவார். மேலும், இவர் ஊர்த்தலைவராகவும், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் ரேஷன் கடையில் காசாளராகவும் இருந்து வந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு அங்குள்ள பிரம்மகுளம் பகுதியில் உள்ள தனது வயலுக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், இரவு 10 மணியளவில் பிரம்மகுளம் கண்மாய் பகுதியில் கருப்பையா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். 

இது தொடர்பாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தேவதானத்தில் நடந்த கோயில் திருவிழாவில் கருப்பையாவிற்கும், வேறு சிலருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் உருவான முன்விரோத்தில் கருப்பையாவை மரம் நபர்களால் கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதனிடையே, கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.