தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பழங்குடியின தம்பதி ஹர்ஷாகூடா பகுதியிலுள்ள பிரஷாந்த் ரெட்டி என்பவருடைய பண்ணையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த மற்றொரு பண்ணையில் இருக்கும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என அந்தத் தம்பதியை பிரஷாந்த் அழைத்துச் சென்றுள்ளார்.

 

நண்பர்கள் 4 பேரையும் உடன் அழைத்து வந்த பிரசாந்த் அந்த வீட்டை அடைந்ததும் கணவன், மனைவி இருவரையும் தனித்தனி அறையில் அடைத்து வைத்துள்ளார். தனி அறையில் அடைத்து வைத்து அந்தப் பெண்ணை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரை இரும்புக் கம்பி, பெல்ட் போன்ற ஆயுதங்களால் தாக்கி 3 நாட்களாக அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவருடைய கணவரையும் மற்றொரு அறையில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். அந்தத் தம்பதி வேலை செய்த பண்ணையில் இருந்து தீவனத்தை திருடி விற்றதாகக் கூறப்படுகிறது. அதை அந்தப் பெண் ஒப்புக்கொண்ட பிறகே 3 நாட்கள் கழித்து அவர்கள் இருவரையும் விடுவித்துள்ளனர்.

பின்னர் அவர்களிடம் தீவனம் வாங்கிய சுரேஷ் என்பவரையும் பிரஷாந்த் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என 3 பேரையும் மிரட்டிய அவர் பின்னர் ஊர் பெரியவர்கள் மூலம் பணம் கொடுத்து  சமாதானம் செய்ய முயற்சித்துள்னர். ஆனால், பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்த தம்பதி போலீஸில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரையும், அதற்கு ஆதரவாக செயல்பட்ட 9 பேரையும் கைது செய்துள்ளனர்.