ஸ்ரீனிவாஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குளத்தில் இருந்த சலியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

தெலுங்கானா மாநிலத்தில் நபர் ஒருவர் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்து, அவரின் உடலை சாக்குப் பையில் போட்டு, குளத்தில் வீசி எறிந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஆத்திரத்தில் இரண்டாவது மனைவியை கொலை செய்ததை அடுத்து, அந்த நபர் சில மணி நேரங்களில் காவல் துறையினரிடம் சரண் அடைந்துள்ளார். இந்த கொலை வழக்கில் சரண் அடைந்த நபரின் முதல் மனைவிக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவங்கி இருக்கின்றனர். 

இரண்டாவது திருமணம்:

தெலுங்கானா மாநிலத்தின் லிங்கி தண்டா எனும் பகுதியில் வசித்து வருபவர் கே ஸ்ரீனிவாஸ் (வயது 47). இவர் 2019 ஆண்டு வாக்கில் தனது குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் பேசி, சம்மதம் பெற்று சலி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியிடம் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என கூறி ஸ்ரீனிவாஸ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரின் முதல் மனைவி மஞ்சுளா தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூவரில் மூத்த பெண் எம்.பி.பி.எஸ். பயின்று வருகிறார். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஸ்ரீனிவாஸ் மற்றும் சலி தம்பதிக்கு இரண்டு வயது மகன் இருக்கிறான். மஞ்சுளா மற்றும் ஸ்ரீனிவாஸ் இடையே ஏற்படும் முரண்களால், சலி தனது பெற்றோர் வீட்டிலேயே அதிகம் வசித்து வந்தார். 

அலட்சியம்:

இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு ஸ்ரீனிவாஸ் தனது இரண்டாவது மனைவி சலி மற்றும் மகனை லிங்யா தண்டாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் பிரச்சினைக்குரிய ஒரு ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலத்தை சலியின் பெயருக்கு எழுதி கொடுப்பதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார். 

எனினும், ஸ்ரீனிவாஸ் வாக்குறுதி அளித்தப்படி சலிக்கு நிலத்தை எழுதி கொடுப்பதற்கான முயற்சிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் நில விவகாரத்தில் ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாகவும் தெரிகிறது. இதன் இடையே நேற்று (புதன் கிழமை) காலை ஸ்ரீனிவாஸ் மற்றும் சலி இடையே நில விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை எழுந்து, பின் அது வாக்குவாதமாக மாறியது. 

கொலை:

வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஸ்ரீனிவாஸ் தனது இரண்டாவது மனைவி சலியை கடுமையாக தாக்கி இருக்கிறார். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த ஸ்ரீனிவாஸ் அருகில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் வயிற்றில் மிக கொடூரமாக குத்தினார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சலி அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். உயிரிழந்த சலியின் உடலை சாக்குப் பையில் அடைத்து, பின் அருகில் உள்ள குளம் ஒன்றில் தூக்கி வீசி உள்ளார். 

இதை அடுத்து காவல் நிலையத்திற்கு சென்ற ஸ்ரீனிவாஸ் தனது இரண்டாவது மனைவிக்கு நிலத்தை எழுதி கொடுக்கும் திட்டம் இல்லாத காரணத்தால், ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். ஸ்ரீனிவாஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குளத்தில் இருந்த சலியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் முதல் மனைவி மஞ்சுளாவிற்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.