சென்னை அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்த  பிரசாத் என்பவரின் மகன் ராஜா. 17 வயதாகும் இவர் கிளினிக் ஒன்றில் அட்டெண்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த சிறுவனுக்கும்  மேடவாக்கம் லாக்மா நகரில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி சுவேதாவுக்கும்  மருத்துவமனைக்கு வந்து சென்றபோது நட்பு ஏற்பட்டு பின்னர் அது கள்ளக் காதலாக மாறியது.

இதுகுறித்து ராஜாவின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள்  ராஜாவையும், சுவேதாவையும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. யாரும் அறியாமல் தங்கள் கள்ள உறவை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ராஜாவை காணவில்லை, பல இடங்களிலும் தேடிய ராஜாவின் பெற்றோர் இறுதியாக ஸ்வேதாவின் வீட்டில் அவர் உள்ளாரா? என்று தேடியபோது அவரையும் காணவில்லை. இதையடுத்து அயனாவரம் காவல்நிலையத்தில் ராஜாவின் தந்தை பிரசாத் புகார் அளித்தார்.

புகாரை பதிவு செய்த போலீஸார் ராஜாவையும், சுவேதாவையும் வலை வீசித் தேடினர். அவர்களது செல்போனின் சிக்னலை வைத்து அவர்கள் திருச்சியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

ராஜா, சுவோதா இருவரும் திருச்சியில் ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தபோது திருச்சி போலீசார் கண்டுபிடித்து அவர்களை சென்னைக்கு  அழைத்து வந்தனர். மைனர் சிறுவனை தகாத உறவுக்காக அழைத்துச் சென்றதால் சுவேதாமீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஸ்வேதாவை கைது செய்தனர்.

வயதான ஆண்கள் மைனர் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு மற்றும் வன்முறையில் ஈடுபட்டு கைதாகி போக்ஸோ சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள். ஆனால் சென்னையில் இரண்டாவது முறையாக பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன் தேனாம்பேட்டையில் பெற்ற மகளுக்கு தொல்லை கொடுத்த தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது குறிப்பிடதக்கது.