தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூரில் வட்டார வள சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் வடிவேல் முருகன்.

இவருக்கும் விளாத்திகுளத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் சில ஆணடுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை  பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பள்ளி வளாகத்தில் வடிவேல் முருகன் நின்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து ஆசிரியர் வடிவேல் முருகனை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அந்த மர்ம நபர் வடிவேல் முருகனை வெட்டும்போது, ஏண்டா உனக்கு கல்யாணம் ஒரு கேடா? என் தங்கச்சியைத் தவிக்கவிட்டு உனக்கு வேற பொம்பளை கேட்குதா ? என ஆத்திரத்தில் கத்தியபடி வெட்டி கொலை  செய்துள்ளார். திடீரென இந்த சம்பவம் நடைபெற்றதால் அங்கிருந்த சக ஆசிரியர்களும், மாணவர்களும் அலறி அடித்து ஓடினர்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த வடிவேல் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், வடிவேல் முருகன் தனது தங்கையை திருமணம்  செய்து கொண்டு பின்னர் அவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாலும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் வடிவேல் முருகன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்ததாலும் ஆத்திரமடைந்த மல்லிகாவின் அண்ணன் அற்புத செல்வம் தான் அவரை சரமாரிய வெட்டிக் கொன்றது விசாணையில் தெரியவந்துள்ளது.