கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடை ஊழியரை கடைக்குள் புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு ரூ.1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே போட்டப்பனூரில் செயல்பட்டு வரும், டாஸ்மாக் மதுக்கடையில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராஜா என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு அன்று விற்பனையான பணத்துடன் வீட்டுக்கு புறப்பட தயாராக இருந்தார்.

  

அப்போது, திடீரென கடைக்குள் நுழைந்த மர்ம நபர், விற்பனையாளரிடமிருந்த பணத்தை கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், பணத்தை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையன் அவரை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு ரூ.1.50 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர் ராஜா கொலைக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களை பாதுகாக்க தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.