ஆபாச  வீடியோக்கள் பார்ப்பதில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  இதுதொடர்பாக போலீசார் ஐபி ஆட்ரஸ் உள்ளிட்ட விவரங்களை  சேகரித்து வருவதாகவும் விரைவில் அத்துமீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.  பாலியல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் சீண்டல்களை ஒழிக்க உலக நாடுகள் மற்றும் சர்வதேச  அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன ஆனாலும் அவைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. 

எனவே அதைகட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .  குழந்தைகள் சம்பந்தமான ஆபாச  வீடியோக்கள் பார்ப்பது தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எப் பி ஐ தங்களுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டது அது தொடர்பான சில முக்கிய தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது . அதில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக இதில் சென்னை முதல் இடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

இத்தகவலை அமெரிக்க புலனாய்வு அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ள நிலையில் ,  தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது .  இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் ஏடிஜிபி ரவி ,  குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்களை பார்ப்பது சட்டப்படி குற்றம் . குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்போரின் ஐபி முகவரி மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தமிழக காவல்துறைக்கு வந்துள்ளது .  அதன்படி குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் .  குறிப்பாக குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் ஆபாச கார்ட்டூன் பரப்பும் வாட்ஸ் அப் குழுக்களின் அட்மின் கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.