பாலியல் விவகாரங்களுக்கும், பாஜக பிரமுகர்களுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை!காஷ்மீர் தொடங்கி உத்தரபிரதேசம் வரை பல மாநிலங்களிலும் பாஜக பிரமுகர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் சுழன்றடிக்கும் நிலையில் இப்போது தமிழகத்திலும் அப்படியொரு குற்றச்சாட்டு பூதாகரமாகக் கிளம்பியிருக்கிறது.

சிவகங்கையில் ’குட்மேனஸ்’ என்ற தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது.. ஆனால் அங்கு நடப்பதெல்லாம் “பேட் மேனஸ்” என்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாச்சார பிரிவு தலைவர் சிவகுரு துரைராஜ் தான் இந்த கல்லூரியின் தாளாளர். இங்கு பயிலும் உள்ளூரைச் சேர்ந்த, 19 வயது இளம் பெண் ஒருவருக்கும், சென்னையைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதனிடையே அந்தப் பெண்ணுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது   குறிப்பிட்ட பெண் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

திருமணமாகி ஒரு மாதமே ஆன  புதுப்பெண் 4 மாத கர்ப்பமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், இது குறித்து அவரிடம் துருவித் துருவி கேட்டதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

கல்லூரி தாளாளர் சிவகுரு துரைராஜ், அந்த மாணவியிடம் தனக்கு சாதகமாக நடந்துகொண்டால் அதிக இண்டெர்னல் மதிப்பெண் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.

’’இதை  வெளியே கூறினால்  கொலை செய்துவிடுவேன்’’ என்றும் அவர் அந்த மாணவியை மிரட்டியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் யாரிடமும் மூச்சுவிடாமல் இருந்துள்ளார். ஆனால் பாஜக பிரமுகரின் பாலியல் வன்கொடுமையை கர்ப்பம் காட்டிக் கொடுத்துவிட்டது.

சிவகங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதுடன் சிவகுரு துரைராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வளவுதான். சும்மாவே மெல்றவங்க… இப்போ அவலும் கெடச்சா விடுவாங்களா நம்ம நெட்டிசன்ஸ்… பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு இந்த வேலையைத் தான் பாக்குதா என கலாய்த்து கழுவி ஊத்த தொடங்கிட்டாங்க… அதுமட்டுமின்றி பாஜக தலைவரின் இந்த அநாகரீக செயலைக் கேள்விப்பட்டு சிவகங்கை பகுதி மக்கள், இது என்னடா நம்ம ஊருக்கு வந்த சோதனை என்று தலையிலடித்துக் கொள்ளாததுதான் பாக்கி!