இ.எம்.ஐ கட்டச் சொல்லி மனைவிக்கு போன் செய்தவர் ஆபாசமாக பேசியதால் அவரது கணவர் தனியார் நிதி நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்து மிரட்டிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தேனி மாவட்டம், கம்பத்தில் பஜாஜ் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்குள் அரிவாளுடன் நுழைந்து ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த நிதி நிறுவனத்தில் மாதாந்திர தவணைத் தொகை மூலம் செல்போன் வாங்கிய பெண் ஒருவர், சரியாக தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய ஊழியர்கள், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், இதுகுறித்து தன்னுடைய கணவரிடம் அப்பெண் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், நேற்று மாலை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம், என் மனைவியிடம் ஆபாசமாக பேசி படுக்கைக்கு அழைத்தவர் யாருடா? என வரிவாளை காட்டி மிரட்டுகிறார். 

யாரோ ஒரு ஏஜெண்சிக்கு பணம் சம்பாதித்து கொடுப்பதற்காக கூலிக்கி மாரடிக்கும் நீங்கள் என் மனைவியை படுக்கைக்கு அழைப்பதா? என ஆவேசமாக திட்டுகிறார். அவரிடம் பேச்சு கொடுத்த ஊழியர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு அலுவலகத்தின் வெளிப்பக்கம் பூட்டு போட்டு விட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு போலீசார் வருவதற்கு முன்பே கதவுகள் திறக்கப்பட்டதால் புலம்பியபடியே அந்த நபர் வெளியே சென்றுவிட்டார். ஆனால், அந்த நபரை பற்றி காவல் நிலையத்தில் நிதிநிறுவனத்தினர் புகார் அளிக்கவில்லை.