புதுச்சேரியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து மனைவியை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி, வேல்ராம்பேட், திருமால் நகர், 4 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (55). சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (52) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றினார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் 5 மாதங்களாக தம்பதியர் வீட்டிலேயே இருந்தனர். தேவைப்படும் நேரத்தில் மட்டும் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

 

இந்நிலையில், நேற்று காலை மகன் கிரிக்கெட் பயிற்சிக்கும் மகள் லாஸ்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கும் சென்றிருந்தனர். அப்போது, கணவன், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த கணவர் விஜயன் சாந்தியின் கை, கால்களை கட்டிபோட்டு வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதில் சிறிதுநேரத்தில் சாந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இதனையடுத்து, கொலை செய்த பின் விஜயன், தான் கொலைக்கு பயன்படுத்தபடுத்திய கத்தியுடன் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின் சரண் அடைந்த விஜயன் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற முதலியார்பேட்டை போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.